PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'முன்னாள்
பிரதமர்கள் இந்திராவும், அவர் மகன் ராஜிவும் தேசத்திற்காக ரத்தம்
சிந்தினர். பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் வீட்டில் உள்ள நாய்கள் கூட
தியாகம் செய்யவில்லை' என, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தெரிவித்துள்ளார். இந்திராவை பெண், 'ஹிட்லர்' என விமர்சித்த, ராஜிவை
படுகொலை செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த, தி.மு.க.,வோடு
கூட்டணி அமைத்ததோடு, அவர்களின் அடிமைகளாக விளங்கும் காங்கிரஸ், தியாகம்
குறித்து பேசுவது வெட்கக்கேடானது.
இவ்வளவு பேசிய கார்கே, பிரதமர்
பதவியை மறுத்த, காங்., முன்னாள் தலைவர் சோனியாவை புகழவில்லையே... தன்னை,
அந்த குடும்பம் அடிமையாக நடத்தும் கோபத்துல அதை தவிர்த்திருப்பாரோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளுக்கு, 215 கிராம நிர்வாக அலுவலர்கள், 1,099 தட்டச்சர்கள் உள்ளிட்ட நான்காம் நிலை பணியாளர்கள், 3,935 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., என்ற தமிழக தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில், 6.35 லட்சம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில், வெறும், 3,935 பேரை மட்டும் தேர்வு செய்ய இருப்பது கண்டிக்கத்தக்கது.
அந்த, 6.35 லட்சம் பணியிடங்களையும் நிரப்பணும் என்றால், அமெரிக்க அரசின் பட்ஜெட்டை விட அதிக தொகை தேவைப்படுமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு:
கடந்த, 2011ல், தி.மு.க., ஆட்சி வீழ்வதற்கு, மின்சார துறையின் செயல்பாடு காரணமாக இருந்தது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில், தி.மு.க., வீழ்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், 'நீட்' தேர்வும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். மேலும், இந்த ஆட்சி அகற்றப்படுவதற்கு, பெண்களை இழிவுபடுத்திய அமைச்சர் பொன்முடியின் பேச்சும் ஒரு காரணமாக இருக்கும்.
அது சரி... அ.தி.மு.க.,வின் பழைய ஆட்சியும், பழனிசாமியின் செல்வாக்கும் காரணமாக இருக்கும்னு எங்கயும் சொல்ல மாட்டேங்கிறாரே!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை:
'நீட்' விலக்கு, ஹிந்தி திணிப்பு, லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு, கவர்னரது அத்துமீறல்களுக்கு, உச்ச நீதிமன்றம் வழியே கடிவாளம் என, தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும், தி.மு.க.,வை வீழ்த்திவிட்டு, தங்களுக்கு, 'சலாம்' போடும் ஒரு ஆட்சியை, அதுவும் தங்களின் பங்கேற்போடு கொண்டு வர, பா.ஜ., தேர்ந்தெடுக்கும் அடிமை குதிரை தான் பழனிசாமி.
இத்தனை வருஷமா, தி.மு.க.,வை திட்டி தீர்த்துட்டு இருந்த இவர், இப்ப அந்த குதிரை மீது சவாரி செய்வதற்கு தயாராகிறாரோ?

