PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவரான நடிகர் சரத்குமார் அறிக்கை: சர்வதேச அரசியல்
என்பது சாதாரண ஓட்டு வங்கி நாடக அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டது. நாடு
மொத்தமும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முனைப்பாக இருக்கும் சமயத்தில், இங்கு
பலரும், 'சிந்து நீரை நிறுத்தியது தவறானது. நோயாளிகளை பாகிஸ்தானுக்கு
அனுப்புவது கொடுமையானது. பிரதமர், அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால்
தான் கொலைகள் நடந்தன' என்றெல்லாம் கருத்து கூறுவது, நாட்டுப்பற்று
இல்லாதவர்கள் என்பதைத் தான் காட்டுகிறது.
நாளைக்கே, பயங்கரவாதிகள்
மீது மோடி அரசு, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போன்று அதிரடி நடவடிக்கை
எடுத்தாலும், 'சேதாரத்துக்கு ஆதாரம் குடுங்க'ன்னு குறைதான் கூறுவாங்க!
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் பேட்டி: தமிழகத்தில், 31,336 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், கடந்த கல்வியாண்டில் படித்த மாணவர்கள் எண்ணிக்கை, 25.50 லட்சம்தான். ஆனால், 4,496 தனியார் பள்ளிகளில், 30.60 லட்சம் மாணவர்கள் படித்துள்ளனர். 'நாங்கள் கல்வித் துறையில் சாதனை படைத்து விட்டோம்' எனக் கூறும் தி.மு.க., அரசு, இதை எண்ணிப் பார்க்க வேண்டும். தரமான கல்வியில், பழனிசாமி ஆட்சியில் முன்னணியில் இருந்த தமிழகம், இன்று நான்காவது இடத்திற்கு சென்றுவிட்டது தெரியுமா?
கடந்த 2024 - 25ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்கு 44,042 கோடி ரூபாயை ஒதுக்கியும், நாலாவது இடம்தான் கிடைச்சிருக்குதா?
அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அறிக்கை: மத்திய அரசு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. இதை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி, என் தலைமையில் இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் மீனவர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவரது போராட்டத்தின் தீவிரத்தைப் பார்த்து, மத்திய அரசு பணிந்து, திட்டத்தை வாபஸ் வாங்கினா நல்லது!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி: கடந்த 2004 - 2014ம் ஆண்டு வரை, காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க., மத்திய அரசில் தங்களுக்கு வேண்டிய முக்கிய துறைகளை கேட்டுப் பெற்றது. ஆனால், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. தற்போது மாநில சுய உரிமை குறித்து பேசி நாடகம் போடுகிறது.
அதானே... நீர்வளத்துறையை கேட்டு வாங்கி, அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் தாவாவை தீர்த்திருக்கலாமே!

