PUBLISHED ON : மே 04, 2025 12:00 AM

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: பீஹாரில்
பூரண மதுவிலக்கை, அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார்
அமல்படுத்தியுள்ளார். ஆனால், கள்ளக்குறிச்சியில்
கள்ளச்சாராயம் குடித்து
இறந்தவர்களுக்கு, தி.மு.க., அரசு, 10
லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறது. இதை எப்படி, மக்கள் நல அரசு
எனக் கூற முடியும். அதனால், மது கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் டிசம்பரில்,
மதுரையில் மாநாடு நடத்தப்படும்; அதில் பீஹார் முதல்வர் நிதிஷ்
குமார் பங்கேற்பார்.
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், சமூக செயற்பாட்டாளருமான காளியம்மாள் பேட்டி: அரசியலை விட்டு நான் விலகவில்லை. ஆறு ஆண்டுகள் குழந்தைகளை கூட பார்க்காமல், அரசியல் களத்தில் நின்றிருந்தேன். எனக்கும் இரண்டு மாதம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், திடீரென மற்றொரு இடத்திற்கு ஓட முடியாது. அரசியலை விட்டு ஒருபோதும் விலக முடியாது; அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
அது சரி... 'ஆறு வருஷம் சீமான் கட்சியில் இருந்தும் பலனில்லை... அடுத்த அத்தியாயத்தை சீக்கிரம் ஆரம்பிக்கப் போறேன்'னு சொல்றாங்களோ?
காங்., கட்சி தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவரும், கடலுார் காங்., - எம்.பி.,யுமான விஷ்ணு பிரசாத் பேட்டி: போக்குவரத்து தொழிலாளர்களுக்கும்ஓய்வு பெறும்போதே, பணப்பலன், சலுகைகளை வழங்க வேண்டும். 2003 மற்றும் அதன்பின் பணியில் சேர்ந்தவர்களை, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும். போக்குவரத்து கழகத்தை அரசே நடத்த வேண்டும். அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும்.
இப்படி எல்லாம் ஆளுங்கட்சிக்கு குடைச்சல் தந்துட்டு இருந்தால், அடுத்த லோக்சபா தேர்தலில் கடலுாரை இவர் மறந்துட வேண்டியது தான்!
த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் பேச்சு: பூத் ஏஜன்ட் என்றால், சாதாரண ஆட்கள் இல்லை. நம் கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறவர்கள் நீங்கள்தான். த.வெ.க., என்றால், பிற கட்சியினருக்கு பயம் வந்துவிட்டது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன் எனக் கூறி, இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் முக்கியம். ஓட்டுச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும், 100 பேருக்கு சமம்.
தேர்தலில் வேட்பாளர்பட்டியல் அறிவிச்ச பிறகு, இவரது கட்சியினர் மாற்றுக் கட்சிக்கு தாவாம கட்டுக்கோப்பா இருந்தாலே பெரிய சாதனைதான்!

