PUBLISHED ON : மே 17, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பிளஸ் 2
தேர்வு வேதியியல் பாடத்தில், ஒரே மையத்தில் தேர்வு எழுதிய, 167 மாணவர்கள்
நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இயல்பாக
படித்து தேற வேண்டிய மாணவர்களை, செயற்கையாக மதிப்பெண்கள் பெற வைப்பது,
மாணவர்களை சீரழிக்கும் செயல் என்பதையும், அடுத்த தலைமுறையை அழிக்கும் செயல்
என்பதையும், தி.மு.க., அரசு உணர வேண்டும். இந்த முறைகேடுகளை களைந்து,
முறையான கல்வியை மாணவர்களுக்கு அளித்தால் மட்டுமே அடுத்த தலைமுறை
முன்னேறும்.
'மதிப்பெண்கள் தான் மாணவர்களின் எதிர்காலம்'என்ற சிந்தனை ஒழியாத வரைக்கும், இதுபோன்ற முறைகேடுகள் தொடரவே செய்யும்!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேட்டி: தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. குற்றம் நடக்கும் பட்சத்தில் யாராக இருந்தாலும், குற்றவாளி எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் உத்தரவாக இருக்கிறது.
பொள்ளாச்சி சம்பவம் போலவே, அண்ணா பல்கலை மாணவி வழக்கிலும் குற்றவாளிக்கு சீக்கிரம் தண்டனை பெற்றுத் தந்தால்தான், இவரது கருத்தை ஏத்துக்க முடியும்!
தமிழக காங்., பொதுச்செயலரும், கிராம கமிட்டி, 'வார் ரூம்' பொறுப்பாளருமான வசந்தராஜ் பேச்சு: தமிழகம் முழுதும், 12,000 கிராம வார்டு கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் பெறப்பட்டு, அதை சரி பார்த்து, தவறுகள் களையப் பெற்று, அடையாள அட்டை வழங்கும் பணி நடக்கிறது. வரும் 31ம் தேதிக்குள் வரும் பட்டியலை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இதுவரை அமைக்கப்படாத கிராம, வார்டு கமிட்டிகளை முழுவீச்சில் அமைத்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும்.
இளைஞர் காங்கிரசுக்கு போலி உறுப்பினர்கள் சேர்த்த கதை, இங்கயும் நடந்துடாம கவனமா இருங்க!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: பொள்ளாச்சி வழக்கில், நீதியை நிலைநாட்டியது போன்றே, கோடநாடு எஸ்டேட்டில் தடையில்லா மின்சாரத்தை துண்டித்து, கண்காணிப்பு கேமராக்களை மவுனிக்க செய்து, கொலை, கொள்ளையை அரங்கேற்றி ஆதாரங்களை அழித்த, அந்த சாரையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். இதை செய்தால், முதல்வர் ஸ்டாலினுக்கு, ஜெயலலிதாவின் ஆசி நிச்சயமாய் கிடைக்கும்.
கோடநாடு வழக்கில், யாரையோ, 'கோர்த்து விடணும்' என்பதில் குறியா இருக்காரே!