PUBLISHED ON : மே 18, 2025 12:00 AM

தமிழக காங்., துணைத் தலைவர் ராம.சுகந்தன் அறிக்கை:
'ஒரு
சமுதாயத்தின் தலைவர் என்பவர், அந்த சமுதாயத்தினர் கல்வி, ஒழுக்கம் மற்றும்
பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்க வழிகாட்டியாகவும், உந்து
சக்தியாகவும் இருக்க வேண்டும். இதை தவிர்த்து விட்டு, பழம் பெருமைகள்
பேசி, மாற்று சமுதாயத்தினர் இடையே பகையை உண்டாக்கும் வகையில் செயல்படுபவர்,
சமுதாய தலைவராக இருக்க முடியாது; அவர் ஒரு வியாபாரியாகத் தான் இருக்க
முடியும்' என்று, என் தந்தை வாழப்பாடி ராமமூர்த்தி பல முறை சொல்லியுள்ளார்.
ஒரே
சமுதாயமா இருந்தாலும் உங்க தந்தைக்கும், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும்
ஏழாம் பொருத்தம்... அதனால, ராமதாசை தான் அவர் விமர்சித்திருப்பார் என்பது
அப்பட்டமா தெரியுது!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பு குழு நடத்தி வரும் பெங்களூரு புகழேந்தி பேட்டி:
'தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார். அவரது ஆட்சியில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்தது என்பதை பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தின் தீர்ப்பு எடுத்துக்காட்டி விட்டது. பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை நானே தொகுதி தொகுதியாக சென்று பிரசாரம் செய்வேன்.
அந்த பாலியல் குற்றங்கள் நடக்கிறப்ப எல்லாம் இவர் அ.தி.மு.க.,வில் தானே இருந்தாரு... அப்பவே, அதை எதிர்த்து ஏன் வாய் திறக்கலை?
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு அடிப்படை காரணம், மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு தான். இதை குறைக்க தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை.
'மது விற்பனை இல்லாத குஜராத், பீஹாரில் எல்லாம் பாலியல் குற்றங்களே நடக்கலையா' என, தி.மு.க.,வினர் குதர்க்கமா கேட்டாலும் கேட்பாங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு:
சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல், உலகில் வாழும் அத்தனை தமிழர்களையும் சென்றடைந்துள்ளது. எனக்கு இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்த வாய்ப்பளித்த, பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு நன்றி.
மகனுக்கு மாநாடு நடத்த வாய்ப் பளித்த அப்பா, கூட்டணி முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தையும் தருவாரா என்பது கேள்விக்குரியது தான்!