PUBLISHED ON : மே 19, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:
'வரும் 2026,
2031, 2036 வரையிலும் தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும்' என, முதல்வர்
ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது பேரனுக்கும் வழி வகுக்கப்பட்டுள்ளது என்பதை
அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். தமிழக மக்கள் அதற்கான முடிவை எடுப்பர்.
அட... 2041 தேர்தலையாவது எதிர்க்கட்சிகளுக்கு விட்டு வச்சாரே என நினைத்து சந்தோஷப்படுங்க!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் பேட்டி:
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க., அரசு, மக்களை வாட்டி வதைக்கும் ஒரு ஹிட்லர் அரசாக உள்ளது. இந்த மக்கள் விரோத ஆட்சியில் இருந்து மக்களை காப்பாற்றி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்பது ஒட்டு மொத்த தமிழகத்தின் குரலாக உள்ளது. நிச்சயம், 2026ம் ஆண்டில் பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார். ஏனென்றால், அவருக்கு முருக பெருமானின் அருளாசி உள்ளது.
அது சரி... பழனிசாமி என்ற பெயரிலேயே முருகன் இருப்பதால், அளவு கடந்த நம்பிக்கையுடன் சொல்றாரோ?
தி.மு.க., மதுரை மண்டல பொறுப்பாளரான, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு:
மதுரையில் தான் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 1ல் முதல்வர் நடத்த உள்ளார். தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. நிர்வாகிகள் கட்சிப் பணியை முதன்மைப் பணியாகக் கொள்ளுங்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளை வெல்வதன் மூலம், 200 தொகுதிகளில் வெற்றி என்ற முதல்வர் ஸ்டாலினின் இலக்கை எளிதாக அடைய முடியும்.
முதல்வர் இலக்கு வைக்கிறதும், இவர் கட்சியினருக்கு இலக்கு வைக்கிறதும் சரி... வாக்காளர்கள் மனசுல என்ன இலக்கு இருக்குன்னு யாருக்கு தெரியும்?
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு:
சில கட்சிகள், அரசியலுக்காக மாநாடுகளை நடத்துவர். சிலர் முழு நிலவு மாநாட்டை நடத்தி, அதில் எவ்வித பொருளும் இல்லாமல் முடித்துள்ளனர். ஆனால், வி.சி., கட்சி பல்வேறு தலைப்புகளில், பல ஆயிரம் பொருள் பேசக்கூடிய மாநாடுகளை நடத்தி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், முத்தலாக் திருத்த சட்டம், வக்ப் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்.
மதுவிலக்கை வலியுறுத்தி இவர் ஒரு மாநாடு நடத்தினாரே... அதுக்கு வெற்றி கிடைச்சிடுச்சா?