PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேட்டி: 'மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்டசபையும், லோக்சபாவுமே உயர்ந்தது; மற்ற நிர்வாக
பொறுப்பில் இருப்பவர்கள் உயர்ந்தவர்கள் இல்லை' என்ற திட்டவட்டமான தீர்ப்பை
உச்ச நீதிமன்றம் வழங்கிஉள்ளது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு
நடந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர்கள் என்ன கேள்விகள் எழுப்பினரோ, அதையே
தான், ஜனாதிபதி மூலமாக மத்திய பா.ஜ., அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும்
எழுப்பியுள்ளது. ஜனாதிபதி பதவியை, தவறான முறையில் மத்திய அரசு
பயன்படுத்துகிறது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு.
தி.மு.க.,வின் கருத்தையே கண்ணாடி போல பிரதிபலிக்கிறாரே... சட்டசபை தேர்தலில் கூடுதல் சீட்கள் போட்டு கொடுப்பாங்களா?
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சு: தி.மு.க.,வினரின் அடக்குமுறைக்கு ஆதரவாக, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தேசியக்கொடி பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மற்றொரு நாள் முத்துப்பேட்டையில், தேசியக்கொடி பேரணி நடத்தப்படும்.
மற்ற ஊர்களில் எல்லாம் அனுமதி தந்த போலீசார், இங்க மட்டும் ஏன் தரலை... ஏடாகூடமா பேசும் எச்.ராஜா, 'ஏழரை'யை இழுத்துடுவார்னு மறுத்துட்டாங்களோ?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் இல்லாததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒன்பது பேர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. 'குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும், வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும்' என்றெல்லாம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால், அரசு பள்ளிகளில் தமிழ் பாடத்தை பயிற்றுவிக்க போதுமான ஆசிரியர்களை நியமிக்க தவறியது ஏன்?
பள்ளிக்கல்வி துறையின் படுமோசமான நிர்வாகத்துக்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியாது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக, தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநரகத்தால் தேர்வு நடத்தப்பட்டது; இதில், அதிக மதிப்பெண் பெற்ற பலர் தேர்வு செய்யப்படவில்லை என்றும்,குறைந்தபட்ச மதிப்பெண்கள் கூட பெறாத பலர் தேர்வு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரத்தில், இந்த அளவுக்கு அலட்சியம் காட்டியது சரியல்ல. இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
எல்லாத்துலயும் முதல்வர் தான் தலையிடணும் என்றால், அந்தந்த துறைகளுக்கு அமைச்சர்கள், செயலர்கள் எதற்கு?