PUBLISHED ON : மே 23, 2025 12:00 AM

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு: தி.மு.க.,வினர்,
தங்களுக்குள் ஏதேனும் வேற்றுமைகள் இருந்தால், அவற்றை மறந்து ஒற்றுமையுடன்
கட்சி பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நாம் அதிக இடங்களில் வெற்றிபெற
முடியும். புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் வாயிலாக, மாணவ
- மாணவியரை உயர்கல்வி படிக்க வைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புள்ளி விபரங்களை எடுத்துக்கூறி, 18 - 25 வயதிற்கு உட்பட்ட இளைய
தலைமுறையினரை, தி.மு.க., பக்கம் அழைத்துவர வேண்டும்.
இந்த மாணவ -
மாணவியரின் அப்பாக்கள், அண்ணன்கள், மாமன்கள் பலரும், 'டாஸ்மாக்' போதையில்
வீழ்ந்து கிடப்பதை யோசித்தால், அவங்க யாரும் தி.மு.க., பக்கம் திரும்பக்கூட
மாட்டாங்க!
தமிழக பா.ஜ., செயலர் கராத்தே தியாகராஜன் பேச்சு: தி.மு.க., ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக, பா.ஜ.,வினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறார். தி.மு.க., அமைச்சர்களுக்கு நயினார் நாகேந்திரன் பாவ மன்னிப்பு வழங்கக்கூடாது. 'அறிவாலயத்தின் செங்கல்லை உருவுவேன்' என, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அண்ணாமலை, அறிவாலயத்தை ஆட்டிப் படைத்தது போல, நயினார் நாகேந்திரனும் செயல்பட வேண்டும்.
'மாநில தலைவர் எப்படி செயல்படணும்'னு ஆளாளுக்கு ஆலோசனை குடுத்தா, தமிழக பா.ஜ.,வுக்கும், தமிழக காங்., கட்சிக்கும் வித்தியாசம் இருக்காது!
தமிழக பா.ஜ., மூத்த தலைவரான நடிகர் சரத்குமார் அறிக்கை: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் சாலையோரம் இருந்த, 50 அடி ஆழ கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து, ஒன்றரை வயது குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானது வேதனை அளிக்கிறது. தமிழகம் முழுதும் சாலையோரம் அமைந்துள்ள பயன் படுத்தப்படாத கிணறுகளை உடனே மூட அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றை எல்லாம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே கணக்கெடுத்து செய்யணும் என, அரசு ஒரு உத்தரவு போட்டாலே போதுமே!
பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி: கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணியும் விரைவில் நேரில் சந்தித்துப் பேசுவர். சட்டசபை தேர்தல் நெருங்கும் முன், இருவரும் சந்தித்துப் பேசி கூட்டணி குறித்து முடிவு செய்வர். வட மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் முழுதும் பா.ம.க., இடம்பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற நிலை உருவாகும்.
உங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு, நெல்லை, துாத்துக்குடி, குமரி மாவட்டங்களில் எல்லாம் உங்களால ஓட்டுகள் வாங்கித்தர முடியுமா?