PUBLISHED ON : ஜூன் 10, 2025 12:00 AM

திருச்சி தொகுதி ம.தி.மு.க., -- எம்.பி., துரை வைகோ பேட்டி: ம.தி.மு.க.,
பொதுச்செயலர் வைகோ, கோவையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கும், நான்
ஒட்டன்சத்திரத்தில் நடந்த கட்சி நிர்வாகி திருமணத்திலும் கலந்து கொள்ள
சென்றதால், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களின் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு
மனு தாக்கலில் கலந்து கொள்ள முடியவில்லை. ம.தி.மு.க., --
எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒப்புதல்
அளித்து கையெழுத்திட்டுள்ளனர். ஆனாலும், தற்போதைய நிலையில் நாங்கள் மிகுந்த
மன வேதனையில் உள்ளோம். இதையும் கடந்து செல்வோம்.
அது சரி... ஓட்டு போடுற அன்னக்கி உங்க கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏதாவது கல்யாணத்துக்கு போயிட மாட்டாங்களே?
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, திருட்டு, போதை பொருள் விற்பனை அதிகரித்து, சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை சரிசெய்வது ஒரு நல்ல அரசின் கடமை. ஆனால், தி.மு.க., அரசு சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. மக்கள் இனியும் இந்த அரசை எதிர்பார்க்காமல் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டனர்.
மக்கள் தயாராகுறது இருக்கட்டும்... தி.மு.க., ஆட்சியை வீழ்த்தணும்னா பெரிய கூட்டணி வேணும்... அதுக்கு உங்க தேசிய ஜனநாயக கூட்டணி எப்ப முழு வீச்சில் தயாராகும்னு முதல்ல சொல்லுங்க!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பாதுகாக்க ஏராளமான கிடங்குகள் உள்ளன. ஆனால், நெல்லை பாதுகாக்க கிடங்குகள் இல்லை. இது போன்ற அநீதியான ஆட்சியாளர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடும் மக்களும் தான் பொறுப்பு.
இப்போதைக்கு பணம் கொழிக்கும், 'டாஸ்மாக்' தான் ஆட்சியாளர்களை காக்கிறது... அதுக்கு தானே அவங்க முதல் மரியாதை தருவாங்க!
கரூர் தொகுதி காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி: முருகனே வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.,வை காப்பாற்ற முடியாது. நீண்ட பாரம்பரியம் உள்ள பெரிய கட்சியான அ.தி.மு.க.,வை கபளீகரம் செய்து பா.ஜ.,வினர் அழித்து விடுவர். வரும் 2026 தேர்தலில், இண்டியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்.
அ.தி.மு.க.,வை பற்றி யோசிக்கறதை விட்டுட்டு, தமிழகத்தை ஆண்ட கட்சியான தேசிய பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை எப்படி மீட்டெடுப்பதுன்னு கொஞ்சம் யோசியுங்களேன்!