PUBLISHED ON : ஜூலை 09, 2025 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
மறைந்த
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, உருவாக்கப்பட்ட
வள்ளுவர் கோட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் புனரமைத்து திறப்பு விழா
நடத்தியுள்ளார். அதுபோல நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள, அரசு
மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காக கருணாநிதி பிறப்பித்த அரசாணை எண்: 354க்கு
ஸ்டாலின் உயிர் கொடுக்க வேண்டும்.
தி.மு.க.,வை எதிர்க்கட்சி வரிசைக்கு இடம் மாற்றத் துடிக்கும் அணியில், அரசு டாக்டர்களும் சேர்ந்துடுவாங்க போலிருக்கே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது போலீஸ் ராஜ்யமா' என, உயர் நீதிமன்றம், அரசின் தலையில் குட்டு வைத்த பின்பும், தி.மு.க.,வின் அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதியால், 'சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதால் தான், பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்' என்று எப்படி சொல்ல முடிகிறது.
'எதிர்க்கட்சி தலைவர் நாட்டில் சுதந்திரமாக நடமாடுவதே எங்க தயவுல தான்' என, ஆர்.எஸ்.பாரதி நினைக்கிறாரோ?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'பெண்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சுக்காக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில், காவல் துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்' என, உயர் நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அஜித்குமார் வழக்கில், 'பாரபட்சமற்ற அரசு என்பதால், சி.பி.ஐ.,க்கு மாற்றுகிறேன்' என கூறிய முதல்வர், பொன்முடிக்கு எதிரான வழக்கிலும் சி.பி.ஐ., விசாரணை கோரி, தான் பாரபட்சமற்ற அரசை நடத்துகிறோம் என உறுதி செய்வாரா?
தி.மு.க.,வின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பொன்முடியும், அஜித்குமார் வழக்கில் சிக்கிய ஐந்து போலீசாரும் ஒன்றாகிடுவாங்களா?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: அங்கன்வாடி மையங்களில் நிலவும் காலி பணியிடங்களால், நடப்பாண்டில் தமிழகம் முழுதும், 501 மையங்கள் மூடப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சியை உறுதி செய்து, அவர்களுக்கு முன்பருவ கல்வி வழங்கும் நோக்கில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாதது, அங்கு படிக்கும் குழந்தைகளின் அடிப்படை கல்வியை கேள்விக்குறியாக்கி உள்ளது.
எல்லா அங்கன்வாடிகளையும் இழுத்து மூடினால் தானே, தனியார் நடத்தும், 'பிளே ஸ்கூல்'கள் வளர முடியும்?