PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்கிருஷ்ணசாமி அறிக்கை: உலகின்
பல நாடுகளில் பட்டாசு ஆலைகள் உண்டு. அந்நாடுகளில் சட்ட விதிமுறைகள்
முறையாக கடைப்பிடிக்கப்படுவதால், விபத்துகள் தடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் விதிமுறைகளை அமலாக்க வேண்டிய மத்திய - மாநில அரசு அதிகாரிகள்
ஊழலில் ஊறி திளைப்பதால், பட்டாசு ஆலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
தமிழக பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை அமலாக்காத அதிகாரிகளை, விபத்துகளுக்கு
பொறுப்பாக்கி, கைது செய்து அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் தொழிலாளர்களும்
பாதுகாக்கப்படுவர்; பட்டாசு தொழிலும் பாதுகாக்கப்படும்.
நல்ல யோசனை தான்... ஆனா, இதை செய்ய ஊழல் இல்லாத ஆட்சியாளர்களும் அவசியம்!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவர் கா.லியாகத் அலிகான் பேட்டி: 'கடந்த, 1975ம் ஆண்டில், எமர்ஜென்சியை அமல்படுத்திய காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை கலைத்தது. அதே காங்கிரசுடன் தற்போது தி.மு.க., கூட்டணி வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அப்போது, எமர்ஜென்சியை எம்.ஜி.ஆர்., தலைமையிலான அ.தி.மு.க., வும் ஆதரித்தது. அந்த கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியுடன் தான், தற்போது பா.ஜ., கூட்டணி வைத்துள்ளது.
எம்.ஜி.ஆர்., பெயரில் இயக்கம் நடத்தும் இவர், பா.ஜ.,வை குறை கூறுவதாக நினைத்து, எம்.ஜி.ஆரை குற்றம் சொல்லிட்டாரே!
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'தமிழகம் முழுதும் பல்வேறு அரசு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிகள், இனி சமூக நீதி வீடுகள் என அழைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க., ஆட்சி முடிவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சமூக நீதி காக்கும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை?
ஜாதிவாரி கணக்கெடுப்பை தான் உங்களது மத்திய அரசு நடத்தப் போகுதுன்னு அமைதியா இருக்கிறாரோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடந்த ஓராண்டில் மட்டும், 17,702 பேருக்கு புதிதாக அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கான முடிவுகளை மிகவும் தாமதமாக அறிவித்து, அவற்றையெல்லாம் புதிய வேலைவாய்ப்புகளாக கணக்கு காட்ட, டி.என்.பி.எஸ்.சி., முயற்சிப்பதாக தெரிகிறது. அப்படி செய்தால், அதை விட பெரிய மோசடியும், முறைகேடும் இருக்க முடியாது.
கரகாட்டக்காரன் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடி போல, டி.என்.பி.எஸ்.சி.,யும் கணக்கு காட்டுதோ?