PUBLISHED ON : ஜூலை 13, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: நாகை மாவட்டம்,
ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல்,
மக்கள் வயல் வரப்பு, ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்
காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தாக்குதலுக்கும், மக்கள்
உள்ளாகின்றனர். மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகம்
இதுவரை, 5,886 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுதும் பல
மாவட்ட கிராமங்களில், சாலைகள் அமைக்கப்படவில்லை.
'கல்வி நிதி, 2,152 கோடி ரூபாயை மத்திய அரசு தரலை'ன்னு ஆட்சியாளர்கள் புலம்பினாங்களே... சாலைக்கு தந்த நிதியை என்ன செஞ்சாங்களாம்?
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி, பூதலுார் பகுதிகளில், கல்லணை அருகில் வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் ஏரிக்குள் இறங்கி போராட்டம் நடத்தி உள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் வரும் உபரிநீர், கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தினால் ஏரிகள் நிரம்பி பாசனத்திற்கு பயன்படும். எனவே, கொள்ளிடம் உபரிநீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.
நீர் மேலாண்மையில் தமிழக அரசு ரொம்பவே பின்தங்கி இருக்கு என்பதற்கு எடுத்துக்காட்டு இதுவே!
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ராமச்சந்திரன் அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே விளாப்பட்டி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பேசிய கலெக்டர் அருணா, 'நம் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பழக்கத்துக்கு அடிமையாகி, தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் நன்றாக படித்து, உயர்ந்த பதவிகளை பெற்று முன்னேற வேண்டும்' என, தெரிவித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டிய கலெக்டரே நடவடிக்கை எடுக்காமல் வருந்துகிறார் என்றால், அவரை தடுக்கும் சக்தி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
போதை விற்பனை கும்பல்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கு என்பதற்கு, இதைவிட உதாரணம் வேண்டுமா?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: தமிழகத்தில் ம.தி.மு.க., தவிர்க்க முடியாத கட்சியாக இருந்தபோதும், தேர்தலில் எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதனால், தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம். வரும் சட்டசபை தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என்பதால், ம.தி.மு.க.,வின் பங்களிப்பு, கூட்டணியின் வெற்றியை தீர்மானிக்கும்.
'ம.தி.மு.க., மட்டும் இல்லை என்றால், தி.மு.க., வெற்றி கேள்விக்குறியாகிடும்'னு நாசுக்கா மிரட்டுறாரோ?