PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:அரசு
மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல், பல்வேறு அசம்பாவிதங்களும்,
உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன; இவை, சுகாதாரத்துறை
நிர்வாகத் திறன் இல்லாமல் இயங்கி வருவதை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, துறைகளை சரியாக நிர்வகித்து, மக்கள்
மத்தியில் நற்பெயர் வாங்கினாலே, மக்கள் உங்களை மதிப்பர். உங்கள் ஆட்சியால்
துன்புற்றிருக்கும் மக்களின்ஓரணி, பேரணியாக மாறி வருகிறது.
அது சரி... சிறப்பா நிர்வாகம் செய்திருந்தால், தேர்தலில் படுத்துக் கொண்டே ஜெயிக்கலாமே... வீடு வீடா போய் வெட்டியா அலையணுமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி: 'தமிழர்கள் பிரிந்து இருப்பதால் தான், தி.மு.க., வலுப்பெறுகிறது' என்று சொல்லும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் தனித்து போட்டியிடுவதால், தி.மு.க., அரசுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து விடுமே என்பதை உணர வேண்டாமா.
'எங்க கூட்டணிக்கு வந்தால், துணை முதல்வர் பதவி'ன்னு துாண்டில் போட்டு, சீமான் சிக்குவாரான்னு பாருங்க!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தி.மு.க., தேர்தல் ஆலோசகர், 'ரூம்' போட்டு யோசிக்கிறார். கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு முன்பணமின்றி, 50 லட்சம் எச்.டி., செட்டாப் பாக்ஸ் சப்ளை. இது எதற்காக...? தி.மு.க., அரசின் பொய் பிரசாரத்தை, வீடுதோறும் கொண்டு செல்வதற்காக. ரேஷன் பொருட்கள் வீடுதோறும் நேரடி வினியோகம். அதோடு வாக்காளர் களுக்கு இலவசங்கள் சேர்ந்து செல்லுமா. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக பிரசாதம் வீடு வீடாக வினியோகம். இது தேர்தலுக்காகவா... ஹிந்துக்கள் ஓட்டுக்காகவா? வாக்காளர்களே உஷார்!
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எல்லாம் தேர்தல் நேரத்தில், எந்த சலுகை திட்டங்களையும் செய்யாதது போல பேசுறாரே!
தமிழக கவர்னர் ரவி பேச்சு: ஆங்கிலேயரை வெளியேற்ற,அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினோம். தற்போது, புதிய இந்தியா உருவெடுத்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் ஏற்பட்ட பரபரப்பான சூழலிலும், அங்கிருந்த நம் நாட்டு மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தான் புதிய இந்தியா. நாம், நம் நாட்டின் பலம் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பெரிய உதாரணமாக, சமீபத்தில் பாகிஸ்தான் மீது நாம் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' உள்ளது.
ஆப்பரேஷன் சிந்துாருக்கு பிறகு பாகிஸ்தானின் சப்தநாடியும் ஒடுங்கி கிடப்பதே, இந்தியாவின் பலத்துக்கு உதாரணம்!

