PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:கடலுார் 
மாவட்டத்தில் ரயில் விபத்துக்கு காரணம், கேட் கீப்பருக்கு தமிழ் 
தெரியாததுதான் என்று சொல்வது வெட்கக்கேடு. தமிழகம் முழுதும் மெட்ரோ 
உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு பணிகளிலும், பெரும்பாலும் ஈடுபட்டிருப்பது 
வடமாநில தொழிலாளர்கள் தான். நாளை அந்த இடங்களில், ஏதேனும் விபத்து 
ஏற்பட்டால், அப்போது மொழியை காரணமாக சொன்னால், அது எவ்வளவு அபத்தமானதோ 
அதேபோல் தான், இந்த விபத்தும்.
வடமாநில தொழிலாளர்கள் நாலு நாள் வேலை நிறுத்தம் பண்ணிட்டா, தமிழகத்தில் பாதி கட்டுமான பணிகள் ஸ்தம்பிச்சு போயிடுமே!
 அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: ஏற்கனவே, அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தி.மு.க., தற்போது, அவர்களது கட்சி உறுப்பினர் சேர்க்கையிலும், வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றுகிறது. இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசுவதால், 2011 தேர்தலில் தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததை போல, 2026 தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும். பழனி சாமி தலைமையில் ஜெ., ஆட்சி நிச்சயம் மலரும்.
கூட்டணி ஆட்சி என்ற கனவில் மிதக்கும் பா.ஜ., எதிர்க்கட்சி வரிசையில் அமரும்னு சொல்லாம சொல்றாரோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: கடலுார் மாவட்டத்தில் ரயில் மோதி, பள்ளி வேன், விபத்தில் சிக்கியதற்கு ஓட்டுநரின் அவசரமே காரணம். தமிழகம் முழுதும், தனியார் பள்ளி நிர்வாகங்கள், பள்ளி பஸ் டிரைவர்களுக்கு இத்தனை மணிக்குள் வர வேண்டும் என, அழுத்தம் கொடுக்கின்றன. அவ்வாறு செய்யக் கூடாது என, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அதெப்படி?  பள்ளிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்படாமல், இஷ்டத் துக்கு செயல்பட முடியுமா?  விபத்து விசாரணை அறிக்கையை பார்த்த பிறகு, அரசியல்வாதிகள் அறிக்கை விடுவது நல்லது மேடம்!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: '10.5 சதவீதம் இட ஒதுக்கீடு' என கூறி, வன்னிய சமூக மக்களை ஏமாற்ற திட்டமிட்டு, தென்பகுதி மக்களை, குறிப்பாக, முக்குலத்தோரின் அரசியலை அழிக்க வெறி கொண்டு அலையும் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு, 2026 சட்டசபை தேர்தலில், தகுந்த பாடம் புகட்ட சபதம் ஏற்போம்.
அ.தி.மு.க., அணிக்கு புகட்டும் பாடம், தி.மு.க., அணிக்கு சாதகமா மாறிடும் என்பது இவருக்கு தெரியாதா? இப்படி இவர் பு।கைவதைப் பார்த்தால், அ.தி.மு.க.,வில் இருந்த போது கூட, கொள்கையைப் பின்பற்றி இருந்ததில்லையோன்னு நினைக்கத் தோணுதே?

