PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: சேலத்தில்,
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றியது
கண்டிக்கத்தக்கது. 'பொது வெளியில் இருக்கக்கூடிய தலைவர்களின் சிலைகளை
எடுத்து, தலைவர் பூங்காக்கள் உருவாக்குங்கள்' என, உயர் நீதிமன்றம் கருத்து
தெரிவித்து, பல மாதங்களாகியும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அப்படி உருவாக்கினால், இதுபோன்ற தேவையற்ற பதற்றம், கலவர சூழல் உருவாவது
தவிர்க்கப்படும்.
நல்ல திட்டம் தான்... ஆனா, இதனால ஓட்டுகள் விழும்னு தெரிஞ்சா விழுந்தடிச்சிட்டு செஞ்சிருப்பாங்க!
தென் சென்னை மத்திய மாவட்ட காங்., தலைவர் எம்.ஏ. முத்தழகன் பேச்சு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்கள் யாத்ரா' என்ற பெயரில், பா.ஜ., தலைவர்களை அருகில் வைத்து பேசும் அளவிற்கு அவருக்கு அச்சம் அதிகரித்து விட்டது. உடைந்து போன, அ.தி.மு.க., வையும், பா.ம.க.,வையும் வைத்து ஓட்டு பெட்டியில் முறைகேடு செய்து, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.,வின் எண்ணம் பலிக்காது. 'இண்டியா' கூட்டணி உறுதியாக இருந்தால், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடிக்கும்.
'உறுதியாக இருந்தால்'னு ஏன் இழுக்கிறாரு... தேர்தல் நெருக்கத்தில் கட்சிகள் அணி மாறும்னு எதிர்பார்க்கிறாரோ?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சவுந்தர்ராஜன் கடிதம்: ஒரு வர்த்தகர் உண்மையான கணக்குகளை மறைத்திருந்தால், அபராதம் விதிப்பது நியாயமானது. அதே நேரத்தில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கக் கூடாது. உதாரணமாக, வருமான வரி தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், அபராதம் விதிப்பதற்கு பதிலாக எச்சரிக்கை அறிவிப்பு மட்டுமே இருக்க வேண்டும்.
'அபராதம் தீட்டிடுவாங்க' என்ற பயம் இருந்தால் தான், எல்லாரும் முன்னெச்சரிக்கையா இருப்பாங்க!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தி.மு.க., தேர்தல் ஆலோசகர்கள் அதிபுத்திசாலிகள்தான். அரசு அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக போட சொன்னது, ரேஷன் பொருட்களை வீட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என்ற பெயரில், மொபைல் போன் எண் பெற்றது என, முழுக்க முழுக்க, தமிழக அரசின் அதிகாரிகள், மக்கள் பணம் ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்திற்கு தி.மு.க., பயன்படுத்துகிறது. இது, இந்தியாவிலேயே முதல் முறை.
இடைத்தேர்தல்களில், 'திருமங்கலம் பார்முலா மற்றும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பொது மக்களை பட்டியில் அடைக்கும் பார்முலாவை யும் அமல்படுத்தியவங்களுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்!

