PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., மூத்த தலைவரும், நடிகருமான சரத்குமார் அறிக்கை:
தங்கள்
கட்சியின் முன்னாள் தலைவரின் பெருமையை உயர்த்தி பிடிப்பதற்காக,
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர் குறித்து, பொய்யான தகவல்களை
தி.மு.க.,வினர் பரப்பி வருவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க
மாட்டார்கள். காமராஜர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய திருச்சி சிவாவை
வன்மையாக கண்டிக்கிறேன்.
காமராஜரை இழிவுபடுத்திய சிவாவை,
காங்கிரசார் கண்டிப்பதை விட, பா.ஜ.,வினர் தான் அதிகமா கண்டிக்கிறாங்க...
இதன் வாயிலாக தி.மு.க., கூட்டணியில் விரிசல் விழுமான்னு
எதிர்பார்க்கிறாங்களோ?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை பேச்சு:
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜீவா வாழ்ந்த தாம்பரம் வீட்டிற்கு சென்றபோது, அவரது ஏழ்மை நிலையை கண்டு அன்றைய முதல்வர் காமராஜர், ஜீவாவின் மனைவிக்கு அரசு வேலை வழங்கினார். ஆனால், கொரோனா பேரிடரின் போது, மக்களை காப்பாற்ற போராடி மாண்ட டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை தராமல், நான்கு ஆண்டுகளாக இன்றைய முதல்வர் கண்ணீர் விட வைத்துள்ளார். காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடும் நேரத்தில், இதை அரசுக்கு நினைவுபடுத்துகிறோம்.
காமராஜர், தன் கடைசி நேரத்தில் கருணாநிதியிடம் பேசினாரா, இல்லையா என்ற சர்ச்சைக்கு முன்னாடி, இதை எல்லாம் ஆட்சியாளர்கள் நினைச்சு பார்ப்பாங்களா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
தி.மு.க., ஆட்சி முடிவுபெறும் நிலையில், மாநிலம் முழுதும், 10,000 முகாம்கள் நடத்தி, மக்களிடம் மனுக்களை பெற்று, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்பதே, நான்கரை ஆண்டுகால தி.மு.க., ஆட்சியின் தோல்வியை ஒப்புக் கொள்வதாகத்தான் இருக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை. மாறாக நிராகரிக்கப்பட்டதாக வேண்டுமானால் மனுக்கள் முடித்து வைக்கப்படலாம்.
அப்படியே நடந்தாலும், மனுக்கள் நிராகரிக்கப்பட்ட மக்களின் ஓட்டுகள் இவங்க அணிக்கு தானே சாதகமாகும்!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
'மாதர் சங்க மகளிர், கஞ்சா சாப்பிட்டு துாங்கி விட்டனரா' என, சீமான் ஏளனமாக பேசியது கண்டிக்கத்தக்கது. தொடர்ச்சியாக பொது தளங்களில், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதை, பிரதான வேலையாக சீமான் செய்து வருவது, மிகவும் மோசமான செயலாகும். வாய் இருக்கிறதுஎன்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது.
இப்படி எல்லாம் ஏடாகூடமா பேசினால் தானே, விளம்பர வெளிச்சம் கிடைக்குது!

