PUBLISHED ON : ஜூலை 26, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை: 'மதுரை
மாநகராட்சியில் துாய்மை பணி மோசமாக உள்ளது' என, தி.மு.க., கூட்டணி யில்
அங்கம் வகிக்கும் மா.கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் வெளிப்படையாக குற்றம்
சாட்டியுள்ளார். 'தி.மு.க., ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கு வெங்கடேசன்
ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளார்' என, பொதுமக்கள் பேசுகின்றனர். சட்டசபை
தேர்தலில் தி.மு.க., தோல்விக்கு இந்த குற்றச்சாட்டு வேதவாக்காக
அமைந்துள்ளது. 'தி.மு.க., தோல்விக்கு எதிர்க்கட்சிகள் தேவையில்லை, கூட்டணி
கட்சியே போதும்'னு சொல்றாரோ?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. இதற்கு பதிலாக, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிப்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், மக்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
இப்போதைக்கு ஆட்சியாளர்கள் மனதில் இருப்பது எல்லாம், தேர்தல் பணிதான்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில், ஜெயலலிதாவால் தாக்கல் செய்யப்பட்ட, 'கச்சத்தீவு மீட்பு' வழக்கை விரைந்து முடிக்க, தி.மு.க., அரசு சட்ட நடவடிக்கை எதையும் இதுவரை எடுக்கவில்லை. மத்திய ஆட்சியில், 17 ஆண்டுகள் இடம் பெற்றிருந்த தி.மு.க., அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு, தற்போது மட்டும் அக்கறை உள்ளது போல் காட்டிக்கொள்வதை, தமிழக மீனவர்களை ஏமாற்றும் தேர்தல் தந்திரமாகத்தான் கருத வேண்டியுள்ளது.
'கச்சத்தீவை திரும்ப தரவே முடியாது'ன்னு இலங்கை அரசு திட்டவட்டமா சொல்லிட்ட பிறகும், அதை பற்றி பேசி என்ன பிரயோஜனம்?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்த, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளோம். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத் தில் ஆட்சிக்கு வரும். அந்த ஆட்சியில் கூட்டணியில் உள்ள கட்சிகளும் பங்கேற் போம். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் கூற வேண்டும். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். எங்கள் கட்சி பெயரை யார் சொல்லவில்லையோ, அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
இவர் மூச்சுக்கு முந்நுாறு முறை தே.ஜ., கூட்டணியில் இருக்கேன்னு சொன்னாலும், அதை அமித் ஷா ஆமோதிக்கிற மாதிரி தெரியலையே!