PUBLISHED ON : ஜூலை 27, 2025 12:00 AM

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா பேச்சு:
தமிழகத்தில், தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை
விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கடுமை
காட்டி அபராதம் விதிக்கின்றனர். ஆனால், கோவில், பள்ளி அருகே, 'டாஸ்மாக்'
கடைகளில் மது விற்பது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. கஞ்சா,
ரவுடியிசத்தால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட
பொருட்களை விற்பதே தப்பு... இதில் வக்காலத்து வேறு வாங்குறீங்களா?
த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா பேட்டி: தி.மு.க., ஆட்சியில், பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. நகர்ப்புறத்தில் விற்கப்பட்ட போதைப்பொருள், இன்றைக்கு கிராமங்களிலும் விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 2021ம் ஆண்டிற்கு முன் பெரிய அளவில் போதைப்பொருள் நடமாட்டம் கிடையாது. நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், மூலை முடுக்குகளில் எல்லாம் கிடைக்கிறது. இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
என்னமோ, கஞ்சாவை கண்டுபிடிச்சதே தி.மு.க., ஆட்சியில் தான் என்பது போல பேசுறாரே!
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக் கத்தின் தலைவர் கா.லியாகத் அலிகான் பேச்சு: தென் மாவட்டங்களில், கணிசமான ஓட்டு வங்கியை கையில் வைத்திருப்பவர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். அவர் வருகிறேன் என்கிறார்; வேண்டாம் என்கிறார் பழனிசாமி. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவையும் துரத்தி விட்டார். சசிகலாவையும் சேர்க்க மாட்டோம் என்கிறார். தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிற கதையாக விஜயை, சீமானை அழைக்கிறார் பழனிசாமி.
பன்னீர்செல்வத்தையும், சசி கலாவையும் அ.தி.மு.க.,வில் சேர்ப்பது, கூடாரத்துக்குள் ஒட்டகத்தை நுழைத்த கதையாகிடும் என்பது பழனிசாமிக்கு தெரியாதா?
தமிழக காங்., துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி: காமராஜரை பற்றி தவறாக பேசிய திருச்சி சிவாவை முதல்வர் கண்டித்திருக்க வேண்டும். கூட்டணியில் இருக்கிறோம் என்பதால், வாய்மூடி மவுனி யாக இருக்க மாட்டோம். சிவா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், என்ன கூட்டணி என்ற கேள்வி எழுகிறது. அதிகமான தொகுதிகளை நாங்கள் கேட்போம். தி.மு.க., கொடுத்து தான் ஆக வேண்டும். காங்கிரசார் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல.
'தி.மு.க., கூடுதல் தொகுதிகளை ஒதுக்கிட்டா, திருச்சி சிவா பேசியதை கண்டுக்க மாட்டோம்'னு சொல்லாம சொல்றாரோ?