PUBLISHED ON : ஆக 07, 2025 12:00 AM

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேட்டி: தமிழகத்தில்
இதுவரை, 329 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி, 2.65 லட்சம் பேருக்கு வேலை
வழங்கி உள்ளோம். 'படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை' என்ற சொல்லை
நீக்குவதற்காக, வேலை வாய்ப்பு முகாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்
செயல்படுத்தி வருகிறார். இந்த, 2.65 லட்சம் பேரும் தனியார் நிறுவனங்களில்
தானே பணிக்கு சேர்ந்திருக்காங்க... எத்தனை பேருக்கு அரசு வேலை
தந்திருக்கோம்னு இவரால சொல்ல முடியுமா?
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தமிழகத்தில், திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை, நெல்லை கவின் ஆணவ கொலை சம்பவங்கள், இரண்டு மாத இடைவெளியில் நடந்துள்ளன. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன் கொடுமை நடக்கிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் சக்தியும் இந்த அரசுக்கு இல்லை.
போதை பொருட்களின் அதிகமான புழக்கமும், பயன்பாடும்தான், பெரும்பாலான குற்றங்களுக்கு முழுமுதற் காரணம் என்பதை மறுக்கவே முடியாது!
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜ்ய சபா எம்.பி., தம்பிதுரை பேட்டி: அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் , கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எண்ணேகொள் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை தி.மு.க., அரசு செயல்படுத்தாமல் முடக்கி உள்ளது. அதேபோல, வாணி ஒட்டு அணை திட்டமும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், எண்ணேகொள் கால்வாய், வாணி ஒட்டு அணை திட்டங்கள் கொண்டு வரப்படும்.
இத்திட்டங்களை வலியுறுத்தி, இவர் இதுவரைக்கும் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்காரு?
தமிழக துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பேட்டி: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக துாய்மை பணியாளர் நலவாரியம் செயல்பாடின்றி முடங்கி போயிருந்தது. முதல்வர் ஸ்டாலின் தான் மீண்டும் இந்த வாரியத்தை செயல்படுத்தினார். நலவாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால், 5 லட்சம் ரூபாய் நிவாரணம் என்பதை, 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மை பணியாளர்களுக்கு சம்பள வேறுபாடு உள்ளது. துாய்மை பணியாளர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்த உள்ளோம்.
இவரது கோரிக்கை எல்லாம் நியாயமானது தான்... ஆனா, அரசிடம் மனம் இருந்தாலும், கஜானாவில் பணம் இருக்கணுமே!