PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை
அறிக்கை: 'எதிலும், எப்போதும் தமிழகம் தான் முதன்மையாக இருக்க வேண்டும்
என்பதே என் விருப்பம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே
நேரத்தில், சுகாதார துறையில் தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக நிலைநிறுத்தி
வரும் அரசு மருத்துவர்களுக்கு, ஊதியம் தருவதில் நாட்டிலேயே கடைசி இடத்தில்
தமிழகம் உள்ளது என்பதை முதல்வருக்கு வேதனையுடன் நினைவுபடுத்த
விரும்புகிறோம். இவங்க நினைவுபடுத்தி தெரியும் அளவுக்கு, நிர்வாகம்
தெரியாமலா முதல்வர் இருக்காரு?
அன்புமணி அணியில் உள்ள பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி பேச்சு: ஜி.கே.மணி தர்மபுரி மாவட்டத்திற்கு வந்து, இந்த இயக்கத்துக்கு உழைத்தவர்களை ஒழித்து விட்டார். அவரது தலைமையில் ஒரு கூட்டம் தான், கடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சவுமியாவை தோற்கடிக்க திட்டம் தீட்டியது. பா.ம.க.,வை, தி.மு.க.,வுக்கு காட்டிக் கொடுத்திருப்பவர் அவர். பா.ம.க.,வில் நிலவும் அத்தனை குழப்பத்துக்கும் அவரே காரணம். ஜி.கே.மணியை யாரும் பகைத்துக் கொள்ள வேண்டாம்; கட்சி பொறுப்பிலிருந்து துாக்கி விடுவார் என, ராமதாசே கூறியுள்ளார்.
ராமதாசும், அன்புமணியும் இணைஞ்சுட்டா, ஜி.கே.மணி பலிகடா ஆகிடுவாரோ?
தேனி தொகுதி தி.மு.க., - எம்.பி., தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி: தி.மு.க., அரசு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் தி.மு.க., கூட்டணி ஜெயிக் கும். ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வருவார்.
ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வருவார் என்றால், உதயநிதிக்கு, 'புரமோஷன்' இல்லாம, மீண்டும் துணை முதல்வர் பதவி தானா?
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை குழுவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் அறிக்கை: 'விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில், வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வேளாண் பணிகள் மேம்படுத்தப்படும்' என, தி.மு.க., அரசு வாக்குறுதி அளித்தது. வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதே தவிர, அதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை என்பது தான் கள யதார்த்தம் . உபகாரத்திற்கு பதிலாக உபத்திரம் தான் தாண்டவமாடுகிறது.
'தி.மு.க., அரசுக்கு உபத்திரம் தாங்க'ன்னு இவரை துாண்டி விட்ட உபகாரி யார் என்ற கேள்வி வருதே!