PUBLISHED ON : ஆக 22, 2025 12:00 AM

தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேட்டி: வரும் சட்டசபை
தேர்தலில், காங்., - தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்; எங்கள் கூட்டணியில்
எந்த பிரச்னையும் இல்லை. எங்கள் கட்சிக்குள்ளும் எந்த பூசலும் இல்லை;
அனைவரும் நண்பர்களே. மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்துக்கு எந்த நன்மையும்
செய்யவில்லை. எப்போது பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததோ, அன்றே
அ.தி.மு.க.,வின் கதை முடிந்தது. தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ்
கட்சி, தமிழகத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் இவர்
சொல்வாரா?
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் பேச்சு: கடந்த, 75 ஆண்டுகளில், தமிழகம் வாங்கிய மொத்த கடன் தொகை, 5 லட்சம் கோடி ரூபாய். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தி.மு.க., அரசு வாங்கிய கடன், 4.50 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தனிநபர் வருமானம் உயர்வு என தி.மு.க.,வினர் கூறுகின்றனர். ஆனால், தி.மு.க., அரசு வாங்கிய கடன் வாயிலாக, இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும், 3.72 லட்சம் ரூபாய் கடன் சுமை உள்ளது.
அட... 75 வருஷத்து கடன் சாதனையை, வெறும் நான்கே வருஷத்தில் எட்டிப் பிடித்த திராவிட மாடல் ஆட்சியை பாராட்டாம, குறை சொல்றாரே!
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள அரசு பள்ளியில், மாணவர்கள் சீருடையுடன் பள்ளி கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களை கட்டடத் தொழிலாளர்களாக மாற்றி, போலி திராவிட மாடல் அரசு என்பதற்கு சிறந்த உதாரணமாகி விட்டது. கல்வித் துறையை மேற்பார்வை செய்ய வேண்டிய அமைச்சர் மகேஷ், துணை முதல்வர் உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை போல் செயல் பட்டு வருகிறார்.
உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் போல செயல்பட்டதால் தான், அவருக்கு அமைச்சர் பதவியே கொடுத்திருக் காங்க தெரியுமா?
ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் அறிக்கை: துாய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள அருந்ததியர், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஒருபோதும் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை முன் வைக்க வேண்டாம். துாய்மை தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட, பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்திருக்கிறது; அதை வரவேற்கிறோம். பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை புறக்கணிப்போம்.
இவங்களது வேற எந்த கோரிக்கையை அரசு ஏற்க மறுத் தாலும், இதை மட்டும் உடனே ஏத்துக்கும்!