PUBLISHED ON : ஆக 24, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: சென்னை
மாநகராட்சி துாய்மை பணியை, 1,000 கோடி ரூபாய்க்கு தனியாருக்கு தாரை
வார்ப்பதை கண்டிக்காமல், அப்பணியாளர்களை தற்காலிக ஊழியர்கள் என கூறி,
தனியார்மயத்திற்கு துணை போவது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் மட்டுமல்ல;
ஏழை, எளிய மக்களை மீண்டும் மீண்டும் காட்டிக் கொடுக்கும் கருங்காலித் தனம்.
துாய்மை பணியாளர்களின் பணி நிரந்தர கோரிக்கைக்கு, புதிய தமிழகம் கட்சி
முழு ஆதரவு அளிக்கிறது. இவரது வாதப்படி பார்த்தால், ஓய்வு பெறும் வரை அவங்க
குப்பை அள்ளிட்டே தான் இருக்கணுமா?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலர் அருணாச்சலம் அறிக்கை: து ணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதா கி ருஷ்ணன் தமிழர் என்ற சிந்தனை குறித்து, கமல் கூறிய கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், தன் மனம் போன போக்கில், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பதில் கூறுவது, அவர் இதுவரை வகித்த பதவிகளுக்கு அழகல்ல. இப்படி எதையாவது கூறி செய்திகளிலும், அரசியலிலும் தன் இருப்பை நிலைநாட்டி கொள்ளவே அவர் முயற்சிக்கிறார்.
இரண்டு மாநிலங்களின் கவர்னராக இருந்த தமிழிசை, கமலை விமர்சனம் பண்ணி தான் தன் இருப்பை காட்டிக்கணுமா என்ன?
தமிழக பா.ஜ. ,வில் இருக்கும், நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழ கன் அறிக்கை: சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய பூலித்தேவனின் தளபதியும், முதல் சுதந்திர போராட்ட வீரருமான வெண்ணிக் காலாடிக்கு தென்காசியில் மணிமண்டபம், சிலை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அமைக்குமா என்பது சந்தேகம் தான்... பேசாம நீங்களே, உங்க கட்சி சார்பில் மணிமண்டபம் கட்டிடுங்க... சட்டசபை தேர்தலில், தென்காசி மாவட்டத்தில் பா.ஜ., வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்!
சென்னை மாநகராட்சி கவுன்சிலரும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவருமான சிவராஜசேகரன் பேச்சு: மதுரையில் வரலாறு திரும்புகிறது என்ற தலைப்பில் நடந்த, த.வெ.க., மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் யார் என்றால், விஜய் திரைப்படங்களை முதல் நாள், முதல் காட்சி பார்க்க கூடும் கூட்டம் தான். காட்டாற்றில் அடித்து செல்லும் வெள்ளம் போலத் தான் அந்த கூட்டம் இருக்குமே தவிர நிலைத்து நிற்காது. தி.மு.க., கூட்டணி, கொள்கை கூட்டணியாக இருக்கிறது. விஜய் கூட்டணி, கூத்தாடிகள் கூட்டணியாகத் தான் இருக்கும்.
இப்படித்தான் எம்.ஜி.ஆரையும் கூத்தாடி என்று விமர்சனம் செய்தாங்க... அவர் சாதித்து காட்டினார்... விஜய் என்ன ஆகப் போறார்னு காலம் தான் பதில் சொல்லும்!