PUBLISHED ON : ஆக 29, 2025 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் பேச்சு: நான் எல்லா வேஷமும்
போட்டிருக்கிறேன். எனக்கு யாரும் வேஷம் கட்ட தேவையில்லை. நான் வேஷம் கட்ட
சொல்லி, இயக்கியிருக்கிறேன். சரித்திரம் வேறு; புராணம் வேறு என, புரிந்தவர்
யாம். அண்ணாதுரை ஆரம்பித்தது இன்றும் நடக்கவில்லை என்றால் நாம் என்ன
செய்து கொண்டிருந்தோம். கட்சி கட்சியாக பிரிந்து விளையாடி கொண்டிருக்கவா
அவர் சொல்லிவிட்டு சென்றார். இவர் தமிழில் பேசுவதே புரியலையே... இதுல, ஆறு
மொழிகள் தெரிஞ்சு வச்சிருக்கேன்னு வேற சொல்றாரே... அந்த மொழிகள்லயும்
இப்படித்தான் பேசுவாரோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: மின் வாரியம், ஆள் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருவதால், சரியான முறையில் மக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்வதில்லை. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ என்ற மோசமான நிலை நிலவி வருகிறது. விளிம்பு நிலை மக்களை அல்லல்படுத்தும் தி.மு.க., ஆட்சி, விரைவில் அகற்றப்பட வேண்டும்.
என்னமோ நடுத்தர, உயர்தட்டு மக்கள் எல்லாம் நிம்மதியாக இருப்பது போல பேசுறாங்களே!
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: தன் கொள்கை தலைவர்களை விட்டுவிட்டு, தி.மு.க.,வை துவக்கிய அண்ணாதுரையை யும், அ.தி.மு.க.,வை துவக்கிய எம்.ஜி.ஆரையும், தே.மு.தி.க.,வை துவக்கிய விஜயகாந்தையும் இரவல் எடுத்து கொண்டது, நடிகர் விஜயின் உறுதியின்மையையும், தன்னம்பிக்கை குறைவையுமே காட்டுகிறது. மேலும், தன்னை தானே சிங்கம் என தற்பெருமை பேசி, 'மை டியர் அங்கிள்' என விளித்து, முதல்வர் ஸ்டாலினை சிறுமைப்படுத்தவும் விஜய் முயற்சித்துள்ளார்.
விஜய்க்கு யார் அரசியல் சொல்லி தர்றாங்கன்னே தெரியலையே... தேர்தல் முடிஞ்ச பிறகு தான் அவங்களுக்கு, 'கண்டம்' காத்துட்டு இருக்கு!
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை: லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம், 'முதலில் நிலவில் காலடி வைத்தவர் யார்' என கேட்டு, 'அது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல; அனுமன் தான்' என கூறியது மிகவு ம் கவலை அளிக்கிறது. அறிவியல் என்பது கட்டுக் கதை அல்ல. வகுப்பறை களில் மாணவர்களை தவறாக வழி நடத்துவது, நம் அரசியலமைப் பின் அடிப்படை மதிப்புகளான அறிவு, பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை அவமதிப்பதாகும்.
அப்படி பார்த்தால், நெற்றியில் பூசிய விபூதியை அழிச்சிட்டு, அதை பகுத்தறிவுன்னு சொல்லிக்கிறவங்க மட்டும் சரியா?