PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'துணை ஜனாதிபதி
தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழர் என்றாலும், அவர்
ஆர்.எஸ்.எஸ்.,காரர் என்பதால், அவரை தி.மு.க.,வால் ஆதரிக்க முடியாது'
என்கிறார் கனிமொழி. முதல்வர் ஸ்டாலின், 'தமிழர் என்ற முகமூடி அணிந்து
ராதாகிருஷ்ணன் ஆதரவு கேட்டு வருகிறார்' என்கிறார். இதே ராதா கிருஷ்ணன்,
1999 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, தி.மு.க., அவரை ஆதரித்து வெற்றி
பெற வைத்ததே. அப்போது இந்த காரணங்கள் எல்லாம் என்ன ஆனது; எங்கே போனது?
அப்ப, பா.ஜ., கூட்ட ணியில் தி.மு.க., இருந்துச்சு... அதனால, அரசியலில்
அப்பழுக்கற்ற இந்திய கம்யூ., தலைவர் நல்லகண்ணுவையே தோற்கடித்து அல்லவா,
சி.பி.ராதாகிருஷ்ணனை ஜெயிக்க வச்சாங்க!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. பா.ஜ.,வினர் அவரை சிறைபிடித்து இருக்கின்றனரா? மக்களிடம் அவர் செல்வதை பா.ஜ., அரசு தடுத்தால், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் செயல்படும் அரசா என்ற கேள்வி எழுகிறது. அவரை வெளியில் வர விடாமல் தடுக்கும் சக்தி எது? தொடர்ந்து இதே நிலை நீடித்தால், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
அவர்தான் உடல்நிலையை காரணம் காட்டி, ராஜினாமா பண்ணிட்டாரே... உடம்பு சரியில்லாதவங்க, வீட்டுல ஓய்வு எடுக்காம, 'டூர்' சுத்திட்டா இருப்பாங்க?
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: கடலுார் மாவட்டம், கீழக்கல் பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில், பயன்படுத்த இயலாத நிலையில் கழிப்பறை இருப்பதால், திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன், கிணற்றில் விழுந்து பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எஞ்சியுள்ள எட்டு மாத ஆட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்று மக்கள் வரிப்பணத்தை சுய விளம்பரத்திற்கு செலவழிப்பதை விட்டு, அரசு பள்ளி கழிப்பறைகளை சீரமைக்க வேண்டும்.
அது சரி... அரசு பள்ளி மாணவர்களா, நாளைக்கு வந்து ஓட்டு போட போறாங்க?
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டி: தமிழகத்தில், மழை பெய்து, 10 நாட்கள் தண்ணீர் தேங்கியிருந்த காலங்கள் எல்லாம் உண்டு. தற்போது, இரண்டு மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விடுகிறது. பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளோம். நீர்நிலைகளும் துார்வாரப் பட்டு வருகின்றன.
இப்ப, இப்படித்தான் சொல்லுவாரு... மழை பெய்து தண்ணீர் சூழ்ந்துட்டா, '100 வருஷம், 150 வருஷம் பெய்யாத மழை பெஞ்சிடுச்சு... நாங்க என்ன பண்ண முடியும்'னு சால்ஜாப்பு சொல்லுவாரு!