PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., உறுப்பினரான நடிகர் சரத்குமார் பேட்டி: 'தேர்தலில்
ஆட்சியமைப்போம்' என, எல்லாரும் தான் சொல்வர். த.வெ.க., தலைவர் விஜய்க்கும்
அந்த உரிமை இருக்கிறது. கடந்த 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், என் முதல்
பிரசாரத்தை, சென்னை, திருவான்மியூரில் துவக்கினேன். அப்போது எனக்கு
கூடத்தான் கூட்டம் கூடியது. நாட்டாமை, சூரியவம்சம் போன்ற வெற்றி படங்களை
கொடுத்து விட்டு தான் நானும் அரசியலுக்கு வந்தேன். 'முன்னணி ஹீரோவா இருந்து
அரசியலுக்கு வந்தும் என்னால ஜெயிக்க முடியலை... விஜய் மட்டும்
ஜெயிச்சிடுவாரா'ன்னு கேட்க வர்றாரோ?
அகில இந்திய இளைஞர் காங்., செயலர் லெனின் பிரசாத் பேச்சு: நடுநிலையாகவும், யாருக்கும் விலை போகாமலும் இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ., அரசுக்கு கட்டுப்பட்டு போலி வாக்காளர்களை உருவாக்கி, ஜனநாயகத்தை சீர்குலைக்க நினைக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க, ராகுல் உச்ச நீதிமன்றத்தில் போராடி, பீஹாரில் நீக்கப்பட்ட, 65 லட்சம் வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்றுவதற்குரிய உரிமையை பெற்று கொடுத்திருப்பதால், அம்மாநில தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி.
ஒருவேளை பீஹார் தேர்தலிலும் காங்., கரையேறாம போயிட்டா, அதுக்கும் ராகுல் தான் காரணம்னு துணிச்சலா சொல்லுவாரா?
தமிழக பா.ஜ., சமூக ஊடக பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி பேச்சு: பிரதமர் மோடி அறிவித்தபடி, 2070ம் ஆண்டுக்குள் இந்தியா பூஜ்ய கார்பன் உமிழ்வை அடைய நாட்டு மக்கள் அனைவரும், அவரது பிறந்தநாள் பரிசாக, மரம் நடும் பணிகளை துவக்குவோம். கிராமங்கள், நகரங்கள், பள்ளிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் வன மண்டலங்களில், 1 கோடி மரங்களை நட வேண்டும். மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறு வனங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, பசுமை பாதையில் பயணிக்கும் போது, பிரதமர் மோடியின் இலக்கு நிறைவேறும்.
மரங்களை நடுவது நல்ல விஷயம் தான்... அதை விட முக்கியம், இருக்கும் மரங்களை வெட்டாம இருப்பது!
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: ராகுலுக்கும், விஜய்க்கும் உள்ள நட்பை விட சிறந்த நட்பு, முதல்வர் ஸ்டாலினுக்கும், ராகுலுக்கும் உள்ளது. தி.மு.க., தலைமை, காங்கிரஸ் தலைமைக்கு இடையே ஆழமான நட்பு உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல, 'இமேஜ்' உள்ளது. அவரது இமேஜ் தான் கூட்டணியை துாக்கி நிறுத்துகிறது. எல்லாரையும் அரவணைத்து செல்கிறார். பக்குவமாக பேசி, ராஜதந்திரமாக நடந்து கொள்கிறார்.
'ஆட்சியில் பங்கு வேண்டும்' என கேட்கும் காங்கிரசாரை ராஜதந்திரமா முதல்வர் சமாளிச்சிடுறாரே!