PUBLISHED ON : செப் 22, 2025 12:00 AM

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி:
'ஆசிரியர்களுக்கு
தகுதி தேர்வு கட்டாயம்' என்ற பிரச்னையில், ஒரு ஆசிரியர் கூட பாதிக்காத
வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி தேர்வு விவகாரம் குறித்து,
மஹாராஷ்டிரா, கேரள அரசுகள், மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
நாங்களும் எங்களின் கோரிக்கையை மத்திய அரசுக்கு தெரிவிப்போம். முதல்வர்
ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு பக்க பலமாக இருப்பார்.
'பதிலுக்கு, தேர்தலின் போது, தி.மு.க.,வுக்கு ஆசிரியர்கள் பக்கபலமா இருக்கணும்' என்ற இவரது, 'மைண்ட் வாய்ஸ்' நல்லாவே கேட்குது!
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டாக்டர் சரவணன் அறிக்கை:
தமிழகத்தில் தற்போதுள்ள மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கை அடிப்படையில், நடப்பாண்டுக்கு, 500 மருத்துவ படிப்பு இடங்கள் கூடுதலாக கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை; தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. ஏ னென்றால், அரசு மருத்துவ கல்லுாரிகளில், முறையான கட்டமைப்புகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தெரிவித்து, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. சுகாதாரத் துறையில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதற்கு, இதுவே சாட்சி.
அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கிய, 11 அரசு மருத்துவ கல்லுாரிகள்லயும், மாற்றாந்தாய் மனப்பான்மை யில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்யாம விட்டதன் விளைவு தான் இது!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி:
அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி இருக்கிறார். ஆனால், அக்கட்சியில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அமித் ஷா, 'பஞ்சாயத்து' செய்கிறார். இதில் எங்கு ஜனநாயகம் உள்ளது... தமிழகத்தில் ஒரு, அ.தி.மு.க., வாக இருந்ததை, நான்கு, அ.தி.மு.க.,வாக மாற்றினர். ஒன்றாக இருந்த, பா.ம.க.,வை இரண்டாக்கி விட்டனர். இது தான், பா.ஜ., வின் சித்து விளையாட்டு.
எதிரணியில் நடக்கும் குழப்பங்கள் எல்லாம், இவர் அங்கம் வகிக்கும், தி.மு.க., அணிக்கு தான் சாதகம் என்பதை மறந்து, இப்படி பேசுகிறாரோ?
த.மா.கா., பொதுச்செயலர், ஜி.ஆர்.வெங்கடேஷ் பேச்சு:
வரும், 2026ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திக்க, கட் சி யின் கட்டமைப்பை பலப்படுத்தி உள்ளோம். கட்சி கொள்கைகள், கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, 60க்கும் மேற் பட்ட மாநில பேச்சாளர் களை, எங்களின், த.மா.கா., தலைவர் வாசன் தேர்வு செய்துள்ளார்.
கட்சி துவங்கி பல வருஷங்களாகியும், இப்ப தான் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க போறாங்களா?