PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி: தலைமை தேர்தல்
ஆணையம், பதிவு செய்யப்பட்ட, 400 கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்
திருத்தத்தில் உள்ள அபத்தங்களை, தேர்தல் ஆணையம் செய்யும் முறைகேடுகளை
அம்பலப்படுத்துகிறார். அதை திசை திருப்புவதற்காக, பதிவு செய்யப்பட்ட
கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் சொல்றது மொட்டை
தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல அல்லவா இருக்கிறது!.
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மற்றும் ஆத்துார் அரசு பள்ளி களில், தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பாட்டு பாடி வாழ்த்து தெரிவிக்க நிர்பந்தம் செய்யப்பட்டதும், கடும் கண்டனத்துக்குரியது. இது, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷுக்கு தெரியுமா? அனிதா ராதாகிருஷ்ணன் பதவி விலக, அமைச்சர் மகேஷ் கோரிக்கை விடுக்க வேண்டும் அல்லது தன் துறையை தன்னால் நிர்வகிக்க முடியவில்லை என ஒப்புக்கொண்டு, மகேஷ் பதவி விலக வேண்டும்.
இவங்க ரெண்டு பேரையும் முதல்வரே நினைச்சாலும் பதவி விலக சொல்ல முடியாது... ஏன்னா, அவங்க உதயநிதியின், 'குட்புக்'ல இருக்காங்க!
சமீபத்தில், அ.தி.மு.க.,விலிருந்து தி.மு.க.,வில் சே ர்ந்த மருது அழ குராஜ் அறிக்கை: தங்கள் தலைவர் வரும் வழிகளில், மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என மின் வாரியத் துக்கு கடிதம் கொடுத்ததே, விஜய் கட்சி மாவட்டச் செயலர் என்றிருக்க, தன் பிரசாரத்தை தடுக்க, மின்சாரத்தை தடை செய்து விட்டதாக விஜய் குற்றம் சுமத்தி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
தன் கட்சியின் மாவட்டச் செயலர்களுடன், விஜய் எந்த அளவுக்கு தொடர்பில் இருக்கார் என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகிடுச்சு!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: வரும், 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க., அச்சப்படுகிறது. நான்கரை ஆண்டாக, தன் கட்சியின் அடிப்படை தொண்டர்களுக்கு கூட தி.மு.க., கசப்பான ஆட்சியையே கொடுத்துள்ளது. 1962 முதல், கூட்டணியுடன் தான் தி.மு.க., தேர்தலை சந்திக்கிறது. அவர்கள் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க தயாரா?
கூட்டணி பலத்தில் தானே திராவிட கட்சிகளின் வண்டிகள், 50 வருஷங்களை தாண்டியும் அசராம ஓடுது... அச்சாணியை கழற்றிட்டு வண்டியை ஓட்ட சொல்றாரே!