PUBLISHED ON : அக் 13, 2025 12:00 AM

நடிகை அம்பிகா பேட்டி: சென்னையில் இருந்து, கரூர் வந்து, நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. நாம் என்ன ஆறுதல் கூறினாலும், 41 பேர் பலியானது பெரிய இழப்பு தான். இனி, இது போன்ற சம்பவம், எங்கும் நடக்கக்கூடாது. இதுபோன்ற கட்சி கூட்டம், மாநாடுகளுக்கு பெண்கள், குழந்தைகள் செல்ல வேண்டாம். 'டிவி'யில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.
இவங்க சொல்றது சரி தான்... அதே நேரம், திடீர்னு இப்படி இவங்க கிளம்பியிருப்பதன் பின்னணியில், அரசியல் ஆசை ஏதும் இருக்குமோ?
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர், டாக்டர் சரவணன் அறிக்கை:
தமிழகத்தில், 'டெங்கு' காய்ச்சல், 'ஜெட்' வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு இல்லை என்ற செய்திகள் வெளியாகின்றன. டெங்குவை தடுக்கும் வகையில், தமிழகம் முழுதும் போதுமான விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யவில்லை. அதை விட்டு, 'மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் இனி, நோயாளி அல்ல; மருத்துவ பயனாளி' என்று அரசாணையை வெளியிட்டு, அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதாக, ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.
அது சரி... இனி, 'டாஸ்மாக்' கடைக்கு வருவோரை, 'போதை பயனாளி' என்று கூட அழைக்க சொல்வாங்களோ?
தமிழக, பா.ஜ., பொதுச் செயலர், ஏ.பி.முருகானந்தம் பேச்சு:
தமிழகத்திற்கும், இலங்கைக்கும், தொப்புள் கொடி உறவு உண்டு. இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள், 2 லட்சம் பேரை கொன்று குவித்த போது, தமிழகத்தில், தி.மு.க.,வும், மத்தியில் காங்கிரசும் ஆட்சியில் இருந்தன. அன்று போரை நிறுத்தி, நம் தமிழர்களை, தி.மு.க., அரசு காப்பாற்றி இருக்கலாமே. இன்று, இஸ்ரேல் நாட்டின் காசா விவகாரம் குறித்து, மேடையில் முழங்கிய தலைவர்கள், அன்று, கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை காப்பற்றியிருக்கலாமே!
நியாயமான கேள்வி... ஆனா, இதற்கெல்லாம், தி.மு.க., - காங்., கூட்டணியிடம் இருந்து பதில் வராது!
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ., பேட்டி: விஜய்க்கு மத்திய அரசு துணை ராணுவ பாதுகாப்பு வழங்குகிறது. பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், விஜயை மிரட்டி, அ.தி.மு.க., - த.வெ.க., கூட்டணி அமைத்து, தமிழகத்தில், தி.மு.க.,-வை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். விஜய், தன் கொள்கையில் உறுதியாக நிற்பாரா; சுயநலமாக முடிவெடுப்பாரா என, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த, இருக்கும் கட்சிகள், இந்தியாவில் எங்கேயாவது இருக்கா?