PUBLISHED ON : அக் 15, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் பேட்டி: மதுரையில்
பா.ஜ., நடத்திய பொதுக் கூட்டத்திற்கு போலீசார் அதிக கெடுபிடிகள் காட்டினர்.
பெரும்பாலும், எங்கள் கட்சிக்கு குறுகலான இடங்களையே ஒதுக்குகின்றனர்.
கூட்டத்திற்கு வருவோரை தடுப்பது, கட்சி கொடிகளை சுருட்டி எடுத்து செல்வது
போன்ற செயல்களில் போலீசார் ஈடுபடுகின்றனர். குறுகலான தெருக்களில் கூட்டம்
நடத்தினா, இவங்களுக்கு நல்லது தானே... குறுகிய இடத்தில் குறைவான
தொண்டர்கள், மக்கள் கலந்துக்கிட்டாலும் தெருவே நிறைந்தது போல தெரியுமே!
மத்திய - மாநில பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பு பொதுச்செயலர் வெங்கடேசன் பேச்சு: தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைத்தவர்கள் அரசு ஊழியர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பின், அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் வேலையை செய்து வருகிறது. எதற்கு எடுத்தாலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவேன்' என்று கூறி, இப்போது அதை பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், 2026 தேர்தலில் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவது உறுதி!
வரும், 2026 பொங்கல் பரிசா இவங்களது கோரிக்கையை நிறைவேற்றி, இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என, ஆளும் தரப்பு காத்திருக்குதோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தீபாவளி திருநாளையொட்டி, வரலாறு காணாத வகையில், ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை, மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தான் தி.மு.க., அரசு பயன்படுத்தி வருகிறதே தவிர, ஒருமுறை கூட மக்கள் நலனுக்காக பயன்படுத்தியதில்லை. ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணத்தை உடனடியாக அரசே நிர்ணயிக்க வேண்டும்.
அதற்கான முழு அதிகாரமும் மாநில அரசிடம் தான் இருக்கு... ஆனாலும், அவங்க கைகளை கட்டி போட்டிருப்பது எந்த சக்தி என்பது தான், 'மில்லியன் டாலர்' கேள்வி!
திண்டுக்கல் தொகுதி மா.கம்யூ., - எம்.பி., சச்சிதானந்தம் பேச்சு: தமிழ் தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவதில்லை; மாறாக மலை, மரம், மாடுகளுக்கு மாநாடு நடத்துகிறார்.
மலை, மரம், மாடுகளுடன் பின்னி பிணைந்தது தானே மனிதர்களின் வாழ்க்கை... ஓட்டு வங்கிக்காக அரசியல் நடத்தும் இவங்களுக்கு, அதை பத்தி எல்லாம் கவலை இல்லை போலும்!