PUBLISHED ON : அக் 16, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'வரும் 2026 - 27ம் கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு முதல் செயற்கை
நுண்ணறிவு பாடம் சேர்க்கப்படும்' என, மத்திய கல்வி அமைச்சர்
தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை கணினி
அறிவியல் பாடமே கற்றுக் கொடுக்காத சூழ்நிலையில், நம் அரசு பள்ளி
குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி சாத்தியப்படுமா என்பது
கேள்விக்குறியே. அதேநேரம், சென்னையில் உள்ள சன் ஷைன் உட்பட அனைத்து தனியார்
பள்ளி மாணவர் க ளுக்கும் செயற்கை நுண்ணறிவு சென்றடையும். அரசு பள்ளிகள்லயே
செயற்கை நுண்ணறிவு பாடத்தை கற்று கொடுத்துட்டா, அப்புறம் தனியார் பள்ளிகள்
எதற்கு?
தி.மு.க., செய்தி தொடர்புகுழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: கார்கள் பலவும், கால்கள் பலவுமாக மாறிச்சென்று, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் காலடியில், அ.தி.மு.க.,வை அடகு வைத்துவிட்டு வந்த அதன் பொதுச்செயலர் பழனி சாமி, அப்படி அடகு வைத்த கட்சியை, இன்னும் சிலரிடம் மேல் வாடகைக்கு விட திட்ட மிடுகிறார். எந்த கொடியாவது வந்து, தன் அரசியலை காப்பாற்றாதா எனும் மனக்குழப்பத்தில், தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.
அறிவாலயத்தின் ஆஸ்தான வித்வான்களை எல்லாம், நேற்று வந்த இவர் ஓரங்கட்டிருவார் போலிருக்கே!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'கோவை ஜி.டி.நாயுடு மேம் பாலத்தில், மத்திய அரசு நிதி ஒரு ரூபாய் கூட இல்லை' என, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு பெருமிதமாக கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை அமைக்க, மாநிலங்களுக்கு, 100 சதவீத நிதியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொடுக்கிறது. இவற்றில், நகருக்குள் மேம்பாலங்கள் கட்டினால் அதன் செலவை மாநில அரசு ஏற்க வேண்டும். நகருக்கு வெளியே கட்டப்பட்டால், அது மத்திய அரசின் நிதியில் கட்டப்படுகிறது. இந்த உண்மையை மறைத்து, தங்கள் வீட்டு காசில் கட்டியது போல், அமைச்சர் வேலு பேசுவது வேடிக்கை.
நகருக்குள் தானே ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கட்டியிருக்காங்க... அமைச்சர் வேலு சொன்னதை தானே, இவர் சுத்திவளைச்சு சொல்றாரு!
பா.ஜ.,வை சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் அறிக்கை: கரூரில், த.வெ.க., கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தனர். தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றாத தி.மு.க., அரசு, த.வெ.க.,வுக்கு எதிராக வன்ம பிரசாரமும் செய்து வருகிறது. இந்நிலையில், கரூர் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது, தி.மு.க.,வுக்கு சவுக்கடி. இதன் வாயிலாக, கரூர் கொடூர சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்.
கரூர் சம்பவத்தில் விஜய் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது போலவே பேசுறாரே!