PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM

தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு பேச்சு:
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில், அந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரசாரம் செய்தார். நடிகர் கட்சி கூட்டத்தை விட, 1,000 பேர் கூடுதலாக வந்தனர். அ.தி.மு.க., பிரசாரத்திற்கு வந்தவர்கள், பழனிசாமி என்ன சொல்லப் போகிறார்; பேசப் போகிறார் என்பதை கேட்க வந்தவர்கள். ஆனால், நடிகர் பிரசாரம் செய்யும் நேரத்தில், அவரை பார்க்க கூட்டம் கூடியது; நெரிசல் ஏற்பட்டது. கேட்க வந்த கூட்டம் நெரிசலில் சிக்கவில்லை; பார்க்க வந்த கூட்டம் தான் நெரிசலில் சிக்கியது.
விஜயை மட்டம் தட்டுவதாக நினைத்து, பழனிசாமிக்கு மக்கள் மத்தியில், 'மாஸ்' இருக்குன்னு, 'சேம் சைடு கோல்' போட்டிருக்காரே!
தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை:
தமிழக துணை முதல்வர் உதயநிதி, 'நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்' என, கூறியதாக செய்திகள் வந்துள்ளன. மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு இப்படி வாழ்த்து கூற துணிச்சல் இல்லாதவர், தீபாவளி பண்டிகைக்கு மட்டும் இப்படி கூறுவது, தமிழக ஹிந்துக்களை மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும், 100 கோடிக்கும் மேற்பட்ட ஹிந்துக்களை அவமதிக்கும் செயல்.
மற்ற மதங்களின் பண்டிகைக்கு இப்படி வாழ்த்து சொன்னால், ஒட்டுமொத்தமா அந்த சமுதாய மக்களின் ஓட்டுகள் பறிபோயிடுமே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:
அ.தி.மு.க., வின், 54ம் ஆண்டு விழாவையொட்டி, அதன் பொதுச்செயலர் பழனிசாமி, கட்சி யினருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், 'களைகளை நீக்கி விட்டோம்' என, குறிப்பிட்டுள்ளார். அவரே, துரோகம் எனும் நச்சு செடி... அ.தி.மு.க., 2026 தேர்தலுக்கு பிறகு தான் புத்துயிர் பெறும். அனைவரும் ஒன்றிணைந்து அதை செய்து காண்பிப்போம். வரும் சட்டசபை தேர்தலில், பழனிசாமிக்கு தக்க பாடம் புகட்டுவோம்.
'பழனிசாமியை வீழ்த்தணும்' என்ற வெறியில் இருக்கும் இவர், அதற்காக, தி.மு.க.,வுடன் கரம் கோர்த்தாலும் ஆச்சரியப் படுறதுக்கு இல்லை!
தமிழக, காங்., விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர், ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: தீபாவளியை முன்னிட்டு பலர், தங்கள் கார்களிலோ அல்லது தங்களுக்கு தெரிந்தவர்களிடமோ உள்ள கார்களை இரவல் வாங்கி, சொந்த ஊர் களுக்கு சென்றுள்ளனர். அந்த கார்களை, வாடகை கார் என்று கூறி, போக்குவரத்து துறையினர் தடுத்து, அதிகப்படியான அபராதம் விதித்து உள்ளனர். அவசர தேவைக்காக பயன்படுத்தப்படும் கார்களுக்கு அபராதம் விதித்தது, தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களின் கட்டண கொள்ளைக்கு வழிவகுப்பதாக உள்ளது.
'ஆம்னி' பஸ்களின் அநியாய கட்டண வசூலை கண்டுக்காதவங்க, அப்பாவி மக்களின் கார்களை குறி வைப்பதை ஏத்துக்கவே முடியாது!