PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை:
நெல் கொள்முதலில், தமிழக அரசின் தவறுகளை தட்டி கேட்டால், உணவுத் துறை
அமைச்சர் சக்கரபாணி, கண் மண் தெரியாமல், மோடி அரசு மீது அவதுாறு பிரசாரம்
செய்கிறார். மத்திய அரசின் மீது பழியை சுமத்தி நாடகமாடுவது தான் திராவிட
மாடல் அரசியலா... தமிழக அரசின் நிர்வாக திறனற்ற செயல்பாடுகளால்,
விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு மீது குற்றம்
சாட்டுவதை, தமிழக அமைச்சர்கள் கைவிட்டு, தங்கள் துறைகளை மேம் படுத்துவதில்,
ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
'நல்லவை நடந்தால், திராவிட
மாடல் அரசின் சாதனை; தவறானவை நடந்தால், பாசிச, பா.ஜ., அரசால் வேதனை' என்பது
தான், தி.மு.க., அரசின் தாரக மந்திரம்!
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர், டாக்டர் சரவணன் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., அரசு, எதற்கெடுத்தாலும், 'இந்தியாவிலேயே முதல் இடத்தில் தமிழகம்' என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தீபாவளி பண்டிகைக்கு, 789 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்து, 'டாஸ்மாக்' சாதனை படைத்துள்ளது. 'மதுவால், இளைஞர்களை சீரழித்த மாநிலம்' என்ற பட்டியலில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
வாஸ்தவம் தான்... தி.மு.க., ஆட்சி நீடித்தால், அடுத்த தீபாவளிக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கும் என்பதில் சந்தேகமில்லை!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
புல்லையும், பூக்களையும் உருவாக்கி, பட்டாம் பூச்சிகளை பவனி வரச் செய்யும், பிற அரசு களுக்கு மத்தியில், 'செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா' என, பூங்காக்களிலும், புறநானுாற்று தமிழ் வளர்க்கும் பெருமை மிக்க ஒரே இயக்கம், தி.மு.க.,
பூங்காக்களில் தமிழ் மொழியை வளர்க்கும், தி.மு.க., தலைவர்கள் பெரும்பாலா னோர், தாங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழை வளர்க்கிறாங்களா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
எங்கள் கட்சியிலும், கூட்டணியிலும் யார், யாரை சேர்க்க வேண்டுமென, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனிடம் யாராவது கேட்டனரா... காலாவதி மருந்தை சாப்பிட்டால், அதுவே விஷமாகி விடும். அதுபோல, காலாவதியான தலைவராகவே தினகரன் உள்ளார்.
ஒரு காலத்தில், தினகரனை சந்திக்க, நேரம் கேட்டு தவம் கிடந்தவர், இன்று இப்படி போட்டு பொளக்கிறாரே!

