PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தனியரசு பேச்சு:
இந்தியாவிலேயே ஜனநாயகம் செழித்து, மதச்சார்பின்மை தழைத்து, எந்த
அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்கும் மாநிலம், தமிழகம் மட்டும் தான்.
தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டுகள் கிடைக்காத காரணத்தால், வட மாநிலங்களைச்
சேர்ந்த, 1 கோடி பேரை வாக்காளர்களாக சேர்த்து, ஆட்சி அதிகாரத்தை பறிக்க,
பா.ஜ., அரசியல் சூழ்ச்சி செய்கிறது. அதை தடுப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின்
தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டம் வெற்றி அடைந்துள்ளது. தி.மு.க.,
கூட்டணியில் ஒரு சீட்டை உறுதிப்படுத்திட்டார்னு நல்லாவே தெரியுது!
தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: அதிக தொகுதிகள் கேட்பது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது, கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்து அல்ல. அப்படியென்றால் நாங்கள் எதுவுமே கேட்கக் கூடாதா? காங்கிரசை இதோடு அழித்து விடுவதா? பா.ஜ., வந்து விடக்கூடாதென காங் கிரஸ் தீக்குளிக்க வேண்டுமா? கூட்டணிக்காக எங்களை அழித்துக்கொள்ள வேண்டுமா? மெழுகுவர்த்தி போல் எரிந்து ஒன்றுமில்லாமல் போக வேண்டுமா? கூட்டணி வைத்தால் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு எதுவும் இல்லை என்றால், அதன் பெயர் கூட்டணி கிடையாது.
'கொடுத்ததை வாங்கிட்டு கம்முன்னு வாங்க'ன்னு டில்லி மேலிடம் சொல்லிட்டா, இவர் ஆவேசம் எல்லாம் தண்ணீர் பட்ட தீயா அடங்கிடும்!
பா.ஜ., தொழில் பிரிவு மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பேட்டி:தமிழகத்தில், 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். மக்கள் விரோத தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவர். மத்தியிலும், மாநிலத்திலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தால், தமிழகத்திற்கு அதிகப்படியான வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும்.
'எதிர்க்கட்சி ஆட்சி நடந்தால், மாநில வளர்ச்சிக்கு எதுவும் செய்ய மாட்டோம்'னு நாசுக்கா சொல்றாரோ?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஐ.சி.சி., மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்ரிக்காவை வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றிக்கு அடித்தளமிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். சிறந்த பயிற்சியாலும், விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் இன்று வெற்றி பெற்றுள்ளனர். பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுக்கு உரிய ஊக்கமும், ஆதரவும் அளித்து உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றியை எந்த அரசியல் தலைவர்களும் பெருசா கண்டுக்காத சூழலில், இவரது பாராட்டு ஆறுதல் அளிக்கிறது!

