PUBLISHED ON : நவ 23, 2025 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேட்டி:
வரும்
சட்டசபை தேர்தல் போட்டி குறித்தும், பூத் கமிட்டிகள் குறித்தும் கட்சி
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன். எங்கள் கூட்டணி கட்சிகளின்
பெருமையையும், அதனால் ஏற்படப்போகும் நன்மைகளையும் கட்சியினரிடம்
எடுத்துரைத்தேன். நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல், பலர்
திரித்து சில கருத்துகளை கூறுகின்றனர். எத்தனை இடங்களில் போட்டியிடுவது
என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேச முடி யாது; பேச வேண்டிய இடத்தில்
தான் பேச முடியும். தி.மு.க., கூட்டணியில், இவர் கட்சிக்கு அதிகபட்சம்
போனா மூணு தொகுதிகள் தருவாங்களா...? அதுக்கு இவ்வளவு, 'பில்டப்'
தேவையா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: தேசத்தை காக்கும் பா.ஜ.,வும், தேச பக்தி கொண்ட அ.தி.மு.க.,வும் ஒன்றிணைந்து இருக்கின்றன. இந்த கூட்டணியால், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். தி.மு.க., ஆட்சியை மக்கள் விரும்பாததால், பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., கூட்டணியில் எதிர்க் கட்சிகள் இணையும்.
இவர் சொல்றதை கேட்கிறப்ப, 'காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...' என்ற சினிமா பாடல் தான் நினைவுக்கு வருது!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: மின் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதில் அரசுக்கும், தனியாருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதையும், தேசிய அளவில் மின்சார கவுன்சில் அமைப்பதையும் இந்த மசோதா ஊக்குவிக்கிறது. மின் துறையை சீரமைக்கும் அதே நேரத்தில் மாநில உரிமைகள், மக்களின் நலன்களை பாதிக்காத வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.
மின் துறையில் நடக்கும் முறைகேடுகளை இந்த மசோதா கட்டுப்படுத்தும் எனில், தாராளமா வரவேற்கலாம்!
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தி.மு.க., எதிர்ப்பு அல்லது பா.ஜ., ஆதரவு என்பதற்காக, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு துணை போக வேண்டாம். தேர்தல் கூட்டணி அவ்வப்போது மாறலாம்; ஆனால், மக்களுக்கு ஓட்டுரிமை என்பது நிரந்தரமானது. அதை பாதுகாப்பது தான், கட்சிகளின் இன்றைய உடனடி கடமை. ஓட்டுரிமையை விட்டுத் தர மாட்டோம்.
மக்களின் ஓட்டுரிமையை பாதுகாப்பது சரிதான்... அதே நேரம், போலி வாக்காளர்களை பொத்தி பாதுகாக்கவும் யாரும் முயற்சிக்கக் கூடாது!

