PUBLISHED ON : நவ 29, 2025 12:00 AM

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி: ராமதாசும், அன்புமணியும்
ஒன்றிணைவதற்காக என் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதற்கும் தயாராக
இருக்கிறேன். இவர்கள் இருவரும் இணையாமல் இருப்பதற்கு, நான் தான் காரணம் என,
பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. அன்புமணி அணியை சேர்ந்தவர்கள், என்னை தீய
சக்தி என கூறுவது வருத்தமாக இருக்கிறது. என்றும் ராமதாசுடன் மட்டுமே
பயணிப்பேன்; அவரை விட, எம்.எல்.ஏ., பதவி எனக்கு பெரிதல்ல! இன்னும் நாலு
மாசம் மட்டுமே இருக்கக்கூடிய, எம்.எல்.ஏ., பதவியை துாக்கி எறிவேன்னு
சொல்வது, பெரிய தியாகமா தெரியலையே!
அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சண்முகம் பேட்டி: தமிழகத்தில் நடக்கும் தவறுகள், குற்றங்களை சுட்டிக்காட்டுவது, எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்கிறோம்; இதில் என்ன தவறு உள்ளது. ஆனால், எங்கள் மீதே வழக்கு தொடர்வதாக காவல் துறையினர் மிரட்டுகின்றனர். தி.மு.க.,வின் ஏவல் துறையாக, காவல் துறை செயல்படுகிறது.
இவங்க ஆட்சி நடந்தப்ப, காவல் துறை சுதந்திரமா இயங்கியது மாதிரியே பேசுறாரே!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: தான் மட்டுமே, 'ஹீரோ' மற்ற அனைவரும் வில்லன் எனும் சினிமாத்தனத்தோடு, யாரோ ஒரு வசனகர்த்தா எழுதிக் கொடுக்கும், அரசியலுக்கு பொருத்தமற்ற வசனங்களை, மூச்சு முட்ட பேசுபவர் ஒன்றை தெரிஞ்சிக்கணும்... ஆளும் கட்சியை எதிர்த்தால், நாமும் ஆளும் கட்சி ஆகிவிடலாம் என, கனா கண்ட பலர், அரசியலில் அடையாளமற்று போனது வரலாறு. அந்த வரிசையில் இடம் பிடிக்கும் வகை யிலேயே, அவரது முதிர்ச்சியற்ற பேச்சும், செயலும் இருக்கின்றன.
இவர் நடிகர் விஜயை தான் சொல்றாரு... ஆனாலும், அவர் பின்னாடி திரளும் கூட்டம், இவங்களது துாக்கத்தை கெடுப்பது நல்லாவே தெரியுது!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'திராவிடர் எனும் சொல், தேசிய கீதத்தில் உள்ளது கவர்னருக்கு தெரியாதா... தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே, கவர்னர் வேலையாக வைத்திருக்கிறார்' என, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். திராவிடம் என்பது இனம் அல்ல; நிலப்பரப்பு என்பதாலேயே, தேசிய கீதத்தில் உள்ளது என்பது ரகுபதிக்கு தெரியாது.
கவர்னரை கேள்வி கேட்டா, இவர் ஏன் முந்திக்கிட்டு பதிலடி தர்றாரு... அதனால தான், 'பா.ஜ.,வின் ஊதுகுழல்'னு, கவர்னரை தி.மு.க.,வினர் வசைபாடுறாங்க!

