PUBLISHED ON : டிச 03, 2025 12:39 AM

Vஅ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி: த.வெ.க., தலைவர்
விஜய், கட்சி துவக்கிய போது தனக்கு பிடித்த தலைவர்கள் என்று அறிவித்த
கொள்கை தலைவர்களின் வரிசையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை படம் இடம்
பெறவில்லை. சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்.,
உருவாக்கிய, 'அண்ணாயிசம்' தான் விஜயின் கொள்கை என்கிறார். விஜய் படத்தை தன்
பாக்கெட்டில் வைத்துக் கொள்ளாமல், ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டு, அதை
நியாயப்படுத்துகிறார். அதுபோல் தன் அலுவலகத்தில், விஜயோடு, எம்.ஜி.ஆர்.,
ஜெயலலிதா படங்களையும் இடம் பெறச் செய்து பேனர் வைக்கிறார். இதையெல்லாம்,
த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ரசிப்பரா என்று தெரியவில்லை. ஆக, சென்ற
இடத்திலும் செங்கோட்டையன் குழப்ப விதையை விதைத்துள்ளார். இதே, எம்.ஜி.ஆர்.,
- ஜெ., படங்களை செங்கோட்டையன் எடுத்துட்டார்னா, தன்னை வளர்த்த தலைவர்களை
ஒரே நாள்ல துாக்கி எறிஞ்சிட்டார்னும் விமர்சனம் பண்ணுவீங்க!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், மத்திய அரசு நிதியின் வாயிலாக நிறுவப்பட்ட கணினி ஆய்வகங்கள், தமிழ் மாணவர்களுக்கு பயன்படாத வகையில் உள்ளன. தற்போது, 8,209 நடுநிலைப் பள்ளிகளில் கணினிகள் நிறுவப்பட்டும், மாணவர்களுக்கு எந்த பயனும் அளிக்காமல், செயல்படாத வகையில் உள்ள ன.
மத்திய அரசை பழிவாங்குறோம்னு, மாணவர் களின் எதிர்காலத்துடன் விளையாடு றாங்களே!
தமிழக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலர் சி.எம்.ராமலிங்கம் அறிக்கை: தமிழக அரசு ஏற்கனவே, 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அதற்கு வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலை உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், ஆளுக்கு ஒரு வீடு, கார், பைக் என அறிவித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவர் சினிமாவில் வேண்டுமானால் வசனம் பேசி நடிக்கலாம்; நிஜத்தில் சாத்தியமா என்பதை பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசித்து பேச வேண்டும்.
என்னமோ, நாளைக்கே விஜய் ஆட்சிக்கு வரப் போறது மாதிரி சீரியசா பேசுறாரே!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: நடிகர் ரஜினி, திரைத்துறையில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதற்கு வாழ்த்துகள்; பாராட்டுகள். மத்திய அரசு ஏற்கனவே, இவரது நடிப்பிற்கு, திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட உயரிய விருதுகளை அளித்து கவுரவித்துள்ளது. அவர் மென்மேலும் பல உயரிய விருதுகளை பெற்று, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும்.
திரை துறையில், 50 வருஷங்களா அசைக்க முடியாத சக்தியா இருக்கும் ரஜினி இதுவரை பெற்ற விருதுகள் போதுமானது தான்!

