PUBLISHED ON : டிச 06, 2025 03:15 AM

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., தேசியக்குழு உறுப்பினருமான விஜயதாரணி
பேச்சு:
பீஹார் மாநில தேர்தல் வெற்றி, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியை
பலப்படுத்தி வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில்
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். நான் மூன்று முறை
எம்.எல்.ஏ.,வாக இருந்த விளவங்கோடு தொகுதியில் உள்ள பூத் கமிட்டிகளுக்கு
நிர்வாகிகளை நியமித்து, மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. கன்னியாகுமரி
மாவட்டத்தில், எந்த தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்ற முடிவை கட்சி
மேலிடம் எடுக்கும்; அந்த தொகுதியில் போட்டியிடுவேன்.
'கட்சி மேலிடம்
உத்தரவிட்டால் போட்டியிடுவேன்'னு சொல்லாம, 'போட்டியிடுவது உறுதி; தலைமை
கண்டிப்பா சீட் தரணும்'கிற மாதிரியே பேசுறாங்களே!
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி:
அதிக இடங்கள், ஆட்சியில் அதிகாரம் என்பதை நாங்கள் வலியுறுத்துவது எங்கள் கட்சி தலைமையிடமே தவிர, தி.மு.க., தலைமையிடம் அல்ல. தமிழகத்தில், 1967-ல் ஆட்சியை இழந்து, 58 ஆண்டுகள் ஆகிவிட்டன. காங்கிரஸ் தொண்டர்களிடம் சோர்வு இருக்கிறது. எங்களின் பெரும்பாலான கோரிக்கைகள், தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்ப டவில்லை என்ற ஆதங்கத்தின் அடிப்படையில்தான் இக் கோரிக்கை எழுகிறது.
ஆட்சியில் பங்கு தந்துட்டா, 'எங்களுக்கு வேண்டியதை நாங்களே எடுத்துக்குவோம்'னு சொல்லாம சொல்றாரோ?
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; இதனால் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் அதிகம் நடக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வரை இது ஓயப்போவதில்லை. ஆளும் கட்சியினராலும் இவற்றை செய்து கொடுக்க முடியாது. ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டனர்.
ஆனா, இவங்க கட்சி சார்பில் எந்த போராட்டமும் நடத்தலையே... நேரமில்லையா அல்லது போராட்டம் நடத்த ஆட்கள் கிடைக்கலையா?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடு குறித்து கூறிய பாராட்டு வார்த்தைகள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழை உயர்த்தி பேசுவது நம் அனைவருக்கும் பெருமை தான். ஆனால், சொல்லில் பாராட்டி, செயல்களில் புறக்கணிக்கும் நிலை குறித்து, தமிழக மக்கள் உண்மை அறிய வேண்டியது அவசியம்.
பிரதமர் மோடி எம்.பி.,யாக இருக்கும் உத்தர பிரதேச மாநிலம், காசியில் வருஷா வருஷம், 'தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்துவது, இவர் கவனத்துக்கு வரலையோ?

