PUBLISHED ON : டிச 12, 2025 03:47 AM

சினிமா நடிகர் ரஞ்சித் பேட்டி:
திருப்பரங்குன்றத்தில், சாராயம் விற்க
அனுமதி கேட்கவில்லையே; சாமி தானே கும்பிட வேண்டும் என்கின்றனர். இதை,
ஆரோக்கியமாக தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் எதிர்ப்பு
தெரிவிக்கும் தமிழக அரசே, நாளை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய சூழல் நிச்சயம்
உருவாகும். எந்த மதத்தினர் வழிபாட்டையும், யாரும் தடுப்பது கிடையாது...
அனைவரும், அண்ணன் - தம்பிகளாகத் தான் இங்கு உள்ளனர். அவ்வகையில், வழிபாட்டு
உரிமையை தடுப்பதற்கு, எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது.
தி.மு.க.,
ஆட்சியில், ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு கூட போராட்டம் நடத்த வேண்டிய
சூழல் தான் நிலவுது!
பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகளும், அக்கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி பேச்சு: பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான சவால்கள் தற்காலிகமானவை. உங்களை நல்ல நிலைக்கு கொண்டு வர பாடுபடும் பெற்றோருக்கு, துணையாக நில்லுங்கள். அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, நடந்து கொள்ளுங்கள்.
மாணவர்களுக்கு அறிவுரை சொல்ற சாக்குல, தன் தம்பி அன்புமணியை, 'நாசுக்கா' குத்தி காட்டுறாங்களோ?
தமிழக, பா.ஜ., துணை தலைவர், கே.பி.ராமலிங்கம் அறிக்கை:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்புகளை, தி.மு.க., அரசு காலில் போட்டு மிதிக்கிறது. 'ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், கவர்னர், தேர்தல் கமிஷன், பல்கலை மானியக்குழு என யாரையும், எதையும் மதிக்க மாட்டோம்' என்பது போல, தி.மு.க.,வினர் செயல்படுகின்றனர். தி.மு.க.,வினர், தாங்கள் அடிக்கிற கொள்ளை, ஊழல், ஊதாரித்தனம், குடும்ப அரசியல் அனைத்தும், மாநில சுயாட்சியின் கோட்பாடு என நினைக்கின்றனர். அதை, இந்திய ஜனநாயகம் ஒருபோதும் ஏற்காது.-
'மாநில சுயாட்சி' என்ற, தி.மு.க.,வினர் முழக்கத்தின் பின்னணியை அப்பட்டமா, புட்டு புட்டு வச்சிட்டாரே!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேச்சு:
அரியலுார் மாவட்ட, தி.மு.க., செயலராகவும், போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருக்கும் சிவசங்கர், அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க, தன் சொந்த பணத்தில், தி.மு.க., ஒன்றிய செயலர்களுக்கு ஜீப் வாங்கி கொடுத்துள்ளார். அவரது கடின உழைப்பால், வரும் சட்டசபை தேர்தலில், அரியலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும்.
சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மட்டுமல்லாம, மின் துறைக்கு அமைச்சராகவும், கூடுதல் பொறுப்புல இருக்காரே... 'வளமான' ரெண்டு துறைகளை வைத்திருப்பவர், ஜீப் என்ன... 'இன்னோவா' காரே வாங்கி கொடுக்கலாம்!

