PUBLISHED ON : டிச 18, 2025 03:27 AM

பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், தி.மு.க., - ஐ.டி., அணி துணை செயலருமான
திவ்யா சத்யராஜ் அறிக்கை:
மேடையில் இருந்து பாட்டு பாடுவோர் எல்லாரும்
தலைவர்கள் கிடையாது; மக்களுக்காக பாடுபடுகிறவர்கள் தான் தலைவர்கள்.
திரையில் நடனம் ஆடுபவர் தலைவர் கிடையாது; தரையில் களம் காண்பவர் தான்
தலைவர். அப்படி, எப்போதும் மக்களுக்காக களத்தில் இருந்து செயல்பட்டு
வருகிறார், தமிழக துணை முதல்வர் உதயநிதி.
தி.மு.க.,வின் எதிர்காலம்
உதயநிதிதான் என்பதையும், அவரை புகழ்ந்தால் தான், தன் எதிர்காலமும் பிரகாசமா
இருக்கும் என்பதையும், கச்சிதமா கணிச்சி வச்சிருக்காங்களே!
தெலுங்கானா முன்னாள் கவர்னரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தமிழிசை பேட்டி:
தமிழக அரசியலில், ஷாவிற்கும், தி.மு.க.,விற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1976ல், அப்போதைய கவர்னர் கே.கே.ஷாவால் தி.மு.க., அரசு வீட்டிற்கு அனுப்பப்பட்டது. அந்த ஷாவை போல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 2026ல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவார். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் கருப்பு - சிவப்பு படையை எதிர்கொள்ள காவிப்படை தயாராகவே இருக்கிறது.
காவிப்படைக்கு துணையாக கருப்பு - வெள்ளை - சிவப்பு கொடி கொண்ட அ.தி.மு.க.,வும் இருக்கு என்ற துணிச்சலில், இப்படி சவால் விடுறாங்களோ?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'தமிழக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர் காலி பணியிடங்களே இல்லை' என, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனால், அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள் எண்ணிக்கை, மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஏற்றவாறு மருத்துவர் பணியிடங்களை அதிகரிக்காமல், 'பூஜ்ய காலி பணியிடங்கள்' என சொல்வது, எந்த வகையில் நியாயம்?
அரசு டாக்டர்கள் ஓய்வுல போனதும், அந்த பணியிடங்களை நிரப்பாம மொத்தமா ரத்து பண்ணிட்டு, 'பூஜ்ய காலியிடங்கள்'னு அமைச்சர் பெருமை அடிக்கிறாரோ?
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை:
பா.ஜ.,வை சேர்ந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், வரும் ஜன., 4ல் ஈரோட்டில் நடக்க உள்ள விவசாயிகள் மாநாட்டில், ஈரோடு மஞ்சள் விவசாயிகள் மற்றும் கவுந்தப்பாடி கரும்பு விவசாயிகளின் குறைகளை கேட்கிறார். விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களும் பங்கேற்க உள்ளனர்.
அன்றைக்கு, தமிழக வேளாண் துறை அதிகாரிகள் யாரும், அந்த பக்கம் தலைவச்சு கூட படுக்க மாட்டாங்க பாருங்க!

