PUBLISHED ON : டிச 22, 2025 03:13 AM

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர்,கோவி.செழியன் பேட்டி:
'வரும் ஜனவரியில், கல்லுாரி மாணவ - மாணவியர், 10 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார். நான்கரை ஆண்டுகளாக, மடிக்கணினி வழங்காமல் இருந்ததற்கு, கொரோனா தொற்றும் ஒரு காரணம். மேலும் நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்காததால் தாமதம் ஏற்பட்டது. தற்போது ஓரளவுக்கு நிதி நிலைமை சீராக இருப்பதால், மடிக் கணினிகள் வழங்கப்பட உள்ளன.
வர்ற ஏப்ரல் அல்லது மே மாதம் வரப்போற சட்டசபை தேர்தலில், கல்லுாரி மாணவ - மாணவியரின் ஓட்டுகளை வளைக்க, மடிக்கணினிகளை தருவதாக சொல்லி, இப்படி, 'டயலாக்' பேசினா யாராவது நம்புவாங்களா?
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: ஒரே, 'பஞ்ச் டயலாக்'கை தான், தன் கூட்டங்களில், தமிழக வெற்றிக்கழகம் கட்சித் தலைவர் விஜய் பேசுகிறார். அக்கட்சி, ஊர், ஊராக சென்று கூட்டங்கள் நடத்துகிறது. ஆனால், தி.மு.க.,வோ ஊர் முழுவதுக்குமான கூட்டங்களை நடத்துகிறது. எனவே, பால்வாடி கட்சிக்கு, பவள விழா கட்சி பதில் கூறினால் நன்றாக இருக்காது.
பவள விழா கட்சிக்கு ஓட்டு போட்டு அலுத்து போன மக்கள், பால்வாடி கட்சிக்கு மாத்தி போட்டுட்டா, இவங்க நிலைமை சிக்கலாகிடாதா?
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: 'தமிழகத்தில், கடந்த நவம்பர் மாதம் பெய்த பெருமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு, இரண்டரை ஏக்கர் சாகுபடி செய்வதற்கு, 90,000 ரூபாய் கடன் கொடுக்கிறது.
ஆனால், பயிர்கள் பாதிக்கப் பட்டால், இரண்டரை ஏக்கருக்கு, 20,000 ரூபாய் தான் இழப்பீடாக வழங்குகிறது; இத்தொகை போதுமானதல்ல. எனவே, கடன் வழங்கும் தொகைக்கு ஈடான வகையில், இழப்பீடு தொகையை தமிழக அரசு வழங்கி, விவசாய பெரு மக்களின் விழி நீரை துடைக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில், ஒரு நடைபயணத்தை துவங்கிட வேண்டியது தானே!
தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: தன் மக்களை அகதிகளாக்கிய, எந்த நாடும் வாழ்ந்ததுமில்லை; வளர்ந்ததுமில்லை. இது நாடுகளுக்கு மட்டுமல்ல; அரசியல் கட்சி களுக்கும் பொருந்தும். அதனால் தான் உலகாளும் தமிழால் உறுதிபட சொல் கி றேன்... அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு ஒருபோதும் எதிர்காலம் இல்லை. பொழுது போக்க, அவர் புதுக்கோட்டைக்கு போகலாம்; அருப்புக்கோட்டைக்கு போகலாம். ஆனால், இனி எக்காலத்திலும், அவரால் புனித ஜார்ஜ் கோட்டைக்கு போகவே முடியாது.

