PUBLISHED ON : டிச 31, 2025 02:47 AM

ராமதாஸ் அணியின், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி: எங்கள் கட்சியினர் முன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசிய உருக்கமான பேச்சு, வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளாக மாறும். கூட்டணி குறித்து, மாவட்ட வாரியாக பா.ம.க., நிர்வாகிகளை அழைத்து, ராமதாஸ் கருத்து கேட்டு வருகிறார். அவர் அமைக்கும் கூட்டணி தான், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். ஓ... ஓட்டை குறி வைத்து தான், உங்கள் தலைவர் அழுதாரோ? அன்புமணி, தே.ஜ., கூட்டணிக்கு போவது, 100 சதவீதம் உறுதியாகிடுச்சு... இவங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தி.மு.க., அணி தான்... அங்கயும், திருமாவளவன் எதிர்ப்பை மீறி இவங்களை சேர்த்துக்குவாங்களா?
பா.ம.க., அன்புமணி பிரிவின், சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு பேட்டி: பா.ம.க.,வில் பிரச்னை ஆரம்பித்தபோது, ஜி.கே.மணி, 'நான் எங்காவது சென்று விடலாமா, விஷம் குடித்து விடலாமா என்று இருக்கிறேன். அன்புமணியும், ராமதாசும் எனக்கு இரண்டு கண்கள்' என, இரட்டை வேடம் போட்டார். ஆனால், தந்தை - மகன் பிரிவுக்கு காரணமே, அவர் தான். தி.மு.க., கொடுத்த வேலையை ஜி.கே.மணி சிறப்பாக செய்து முடித்துள்ளார். அதற்கான சன்மானம், அவருக்கு தி.மு.க.,விடம் இருந்து கிடைக்கிறது; இன்னமும் கிடைக்கும்.
தந்தை - மகன் பஞ்சாயத்தில், ஆளுங்கட்சியை வம்புக்கு இழுக்கலை என்றால், இவருக்கு துாக்கமே வராதோ? ஹிந்து மக்கள் கட்சி தலைவர், அர்ஜுன் சம்பத் பேட்டி: சித்திரை 1ம் தேதி தான் தமிழர்களுக்கு புத்தாண்டு. த மிழர்களுக்கு ஒரு நாள் துவங்குகிறது என்றால், அது சூரிய உதயத்தில் தான் துவங்கும். ஆனால், ஆங்கில புத்தாண்டு என்று கூறி, நள்ளிரவு மது விருந்து, பாட்டில்களை உடைப்பது என்ற கலாசார சீரழிவுடன், பல இடங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை கூட ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும்.
ஆங்கில புத்தாண்டுக்கு, பல நுாறு கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய, 'டாஸ்மாக்' அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் பண்ணியிருப்பது இவருக்கு தெரியாதோ? கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த் பேட்டி: விஜய் இப்போது தான் புதிய கட்சியை துவக்கி இருக்கிறார். யார் தீய சக்தி, துாய சக்தி என, 2026ம் ஆண்டு தேர்தலில் தெரியவரும். தமிழகத்தில்ஆட்சியில் பங்கு என்பது காங்., தொண்டர்களின் கருத்தாக உள்ளது. மேலிட பொறுப்பாளர்களும், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கூடிய விரைவில் இதற்கான பேச்சு துவங்க உள்ளது.
'ஆட்சியில் பங்கு தர சம்மதித்தால் மட்டுமே கூட்டணியில் நீடிப்போம்... இல்லை என்றால், விஜய் பக்கம் வண்டியை திருப்பிடுவோம்'னு ஒரே போடா போட வேண்டியது தானே!

