PUBLISHED ON : ஜன 08, 2026 03:37 AM

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி:
'தி.மு.க.,வை ஒழிப்போம்' என, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா கூறியிருக்கிறார். தேர்தல் வந்தால் இதுபோன்ற வசனங்கள் வரத்தான்
செய்யும். லோக்சபா தேர்தலின்போது, அமித் ஷா பலமுறை தமிழகம் வந்தபோதும், ஒரு
இடத்தில் கூட பா.ஜ.,வால் வெற்றி பெற முடியவில்லை. வெறும் வாய்ச்சவடால்
பேசுகின்றனர். பெரிய ஜாம்பவான்கள் எல்லாம், தி.மு.க.,வை அழிக்க வேண்டும் என
சொல்லி, அழிந்து போயிருக்கின்றனர்.
அமித் ஷா இந்த முறை, அ.தி.மு.க., என்ற
கூட்டணி பலத்துடன் வர்றாரே... அதனால, இந்த தேர்தலில் இவங்க வெற்றி சுலபமா
இருக்காது!
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேச்சு:
கல்லுாரியில் இறுதி ஆண்டு படிக்கும், 10 லட்சம் மாணவ - மாணவியருக்கு முதல்வர் மடிக்கணினிகள் வழங்கியுள்ளார். இது, அவர்களின் கல்விக்கு பயனுள்ளதாக அமையும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்டம், ஒவ்வொரு குடும்பத்துக்கும், 3,000 ரூபாய் பொங்கல் பரிசு என, ஒவ்வொரு நாளும் இன்ப அதிர்ச்சியை மக்களுக்கு முதல்வர் வழங்கி வருகிறார்.
ஆனா, தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்துட்டா, இப்படி கொடுத்ததை எல்லாம் எடுக்க, வரிகள், மின்சாரம், பால் கட்டணங்களை எல்லாம் ஏத்தி, மக்களுக்கு துன்ப அதிர்ச்சியை கொடுத்துடுவீங்களே!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை:
அரசு ஊழியர்கள், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றே பல ஆண்டுகளாக போராடி வந்தனர். ஆனால், புதிய பென்ஷன் திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்து, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது, அவர்களுக்கு எவ்விதத்திலும் பலனளிக்காது. இப்புதிய உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை, யார் ஆட்சிக்கு வந்தாலும் செயல்படுத்த சாத்தியம் இல்லை.
ஓ... அதனால் தான், இந்தபென்ஷன் திட்டத்தை எப்ப செயல்படுத்துவோம்னு தேதியே அறிவிக்காமல் அடக்கி வாசிக்கிறாங்களோ?
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர், வீரபாண்டியன் பேட்டி: வெனிசுலாவை அமெரிக்க ராணுவம் தாக்கியதை கண்டிக்கிறோம். வெனிசுலா அதிபராக இருந்த மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, நாடு கடத்திய சம்பவத்தை கண்டிக்கிறோம். இந்த அநீதிகளை கண்டிக்கும் தார்மீக பொறுப்பு, இந்தியாவுக்கு உண்டு. ஆனால், பிரதமர் மோடி வாய் திறக்க அஞ்சுகிறார். இந்தியா கவலை தெரிவிப்பதை விட, கண்டிக்க வேண்டும்.
நம்ம நாட்டுல, ஏன் தமிழகத்துலயே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கே... அதை தீர்த்துட்டு, அப்புறம் உலக பஞ்சாயத்துகளுக்கு இவங்க போகலாமே!

