PUBLISHED ON : ஜன 16, 2026 01:52 AM

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில் கொலைகள் தொடர்ந்து
நடப்பது, மக்களுக்கு பாதுகாப்பானதல்ல; ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும்
நல்லதல்ல. வழக்கு விசாரணை சரியாக நடக்காதது; தண்டனை பெற்று தருவதற்கான
காலம் அதிகமாவது ஆகியவையே, ரவுடிகள் பயமின்றி கொலை செய்வதற்கு வழி
வகுக்கின்றன. சட்டம் - ஒழுங்கை சரியாக கடைப்பிடித்து, அனைத்து தரப்பு
மக்களுக்குமான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
உயிரை
காக்கும் மருத்துவமனையிலேயே, படுகொலை நடக்கும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு
சந்தி சிரிப்பது, தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சிக்கு ஆபத்தாகவே முடியும்!
அகில இந்திய இளைஞர் காங்., செயலர் லெனின் பிரசாத் பேச்சு: கடலுாரில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், 'த.வெ.க., தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் துாண்டில் போடுகிறது' என்றும், 'அவர்களின் துாண்டிலில் சிக்க வேண்டாம்' எனவும், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். விஜய பிரபாகரனுக்கு, 34 வயது தான் ஆகிறது. அவர் பேசும் போது, 'எங்கள் வீட்டிற்கு தி.மு.க., காரன் வந்தான், போனான்' என, மரியாதையும், நாகரிகமும் தெரியாமல் பேசுகிறார். அடிப்படை அறிவு இல்லாமல் பேசும் விஜய பிரபாகரனுக்கு, காங்கி ரஸ் கட்சியை பற்றி பேச தகுதி இல்லை.
விஜய பிரபாகரன் எல்லாம் கிண்டல் பண்ற அளவுக்கு, காங்., கட்சியின் நிலை ஆகிடுச்சு பாருங்க!
மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல் எம்.பி., அறிக்கை: பராசக்தி படத்தை பார்க்கும் முன், நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த படம், தி.மு.க., கூட்டணி எதிர்கொள்ள போகும் தேர்தலின் வெற்றிக்கு, மாபெரும் முரசொலியாக போகிறது என்று. இந்த படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல; என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்த படம் தி.மு.க., வரலாற்றுக்கு இட்ட வெற்றித்திலகம்.
அந்த படத்தில், காங்., கட்சியின் ஹிந்தி திணிப்பை கடுமையா விமர்சனம் பண்ணியிருப்பதை இவர் ஏத்துக்கிறாரா?
தமிழக காங்., செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.நெடுஞ்செழியன் அறிக்கை: தி.மு.க., அரசின், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற புதிய திட்டம், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 2030ம் ஆண்டில் வளமான தமிழகமாக இருப்பதற்குரிய தொலை நோக்கு திட்டத்தை உருவாக்க, இத்திட்டம் உறுதுணையாக இருக்கும்.
'ஆட்சியில் பங்கு என்ற எங்க கனவை எப்ப நிறைவேற்றுவீங்க'ன்னு முதல்வரிடம் இவங்களும் கேட்டு பார்க்கலாமே!

