PUBLISHED ON : ஜூன் 12, 2026 12:13 AM

தமிழக காங்., மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
'இண்டி' கூட்டணி கூட்டத்தில் தி.மு.க., பங்கேற்காதது, மிகவும் தவறான முடிவு என்பது என் கருத்து. காங்கிரஸ் மீது தி.மு.க.,வுக்கு கோபமும், வருத்தமும் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதுபோல காங்கிரசுக்கும், தி.மு.க.,வை குறை சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் முடிவுகளை கோபங்கள், வருத்தங்கள் என்ற உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுப்பது, எதிர்காலத்தில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
'இண்டி' கூட்டணியில் இருந்து விலகினால் தான், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி பக்கம் போக முடியும்னு தி.மு.க., தரப்புல நினைச்சிருப்பாங்களோ?
தமிழக காங்கிரஸ் மூத்த துணை தலைவர் கே.விஜயன் அறிக்கை:
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே, ராஜிவ் கொலையாளியான பேரறிவாளனை ஸ்டாலின் கட்டிப்பிடித்து சால்வை அணிவித்து பாராட்டியது, எந்த வகையில் சரியானது என்பதை ஸ்டாலின் சிந்திக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு முன், கூட்டணி கட்சிகளை தி.மு.க., தலைமை கேவலப்படுத்தியது. ம.தி.மு.க.,வை சொந்த சின்னத்தில் நிற்க விடாமல், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது நியாயமற்ற செயல்.
பேரறிவாளனை ஸ்டாலின் கட்டிப்பிடிச்சு வரவேற்றது, 2022ல் நடந்த சம்பவம்... அப்பவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தா, காங்.,கின் தன்மானத்தை பாராட்டி இருக்கலாம்!
பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை:
அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படு ம் மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, கடுமையான தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு தரமான மற்றும் தாமதமற்ற மருத்துவ சேவையை உறுதி செய்ய வேண்டும். அரசு டாக்டர்கள் பற்றாக் குறையை போக்க வேண்டும்.
இவர் சொல்வது போல, அரசு மருத்துவமனைகளுக்கு, 'அவசர சிகிச்சை' அவசியம்!
திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலர் சுப.வீரபாண்டியன் பேச்சு:
'தமிழகம் ஈ.வெ.ராமசாமி மண் அல்ல; அவரே மண் தான்' என்றார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 'அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களை இடிக்க வேண்டும்' என, மீண்டும் மீண்டும் சொன்னார். 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே' என்ற பாட்டை, 'கள்ளத்தனம் கொண்ட கருணாநிதி' என மாற்றி பாடிய சீமான் வீட்டிற்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தாய்மாமன் சீர் கொண்டு சென்றது பெருந்தன்மையா என்பதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
தி.மு.க., தலைமை கேட்க முடியாத இந்த கேள்வியை, இவரை விட்டு கேட்க வச்சிருக்குமோ?
