தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூன் 14, 2026 12:16 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2026 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:

முதல்வராக விஜய் பதவியேற்ற போது, 'என் ஆட்சியில் பவர் சென்டரே கிடையாது. நான் மட்டுமே பவர் சென்டர்' என முழங்கினார். ஆனால், பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரைச் சுற்றி ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிசாமி, ராம்குமார் ஆகியோர் பவர் சென்டர்களாக உள்ளனர். இவர்கள் மொழிப்போர் தியாகிகளா; தமிழ் இனத்திற்காக சிறை சென்றவர்களா?

இவர், ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சராக இருந்தவர் தானே... அப்ப, எந்த அரசு பதவியிலும் இல்லாத சசிகலா, பவர் சென்டரா இருந்ததை மறந்துட்டாரோ?

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:

நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கவும், பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்த்தவும், பல்வேறு சோதனைகளை தாண்டி உழைத்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, போற்றுதலுக்குரியவர்.

குறிப்பாக, 4,400 நாட்களுக்கு மேல் பணியாற்றி, மிக நீண்ட நாட்கள் தொடர்ந்து இருக்கும் பிரதமராக மோடி சாதனை படைத்திருக்கிறார். வலிமையான பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் பிரதமர் மோடியை வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.

'வளமான தமிழகம்; வலிமையான பாரதம்' என்பதே வாசன் கட்சியின் கொள்கை... அதற்கும் சேர்த்தே மோடி பாடுபடுவதால், ஏகத்துக்கும் பாராட்டி தள்ளுறாரோ?

தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்

அறிக்கை: கள் உணவுப்பொருள்; தாய்ப்பாலுக்கு நிகரான சத்துகளை கொண்டுள்ளது. கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அடையாள அட்டை வழங்கியுள்ளது.

பனை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், மக்களின் உடல் நலம் காக்கவும், மது பிரியர்களுக்கு மாற்று பானமாக கள் இருக்கும் என்பதாலும், தமிழக வெற்றிக் கழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

உணவுப்பொருள்னு சொல்றாரே... அப்படி என்றால், திருவள்ளுவர் ஏன், 'கள்ளுண்ணாமை' என்ற பொருளில் குறள்கள் எழுதியிருக்கார்னு இவர் விளக்கம் தருவாரா?

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி:

தேர்தல் நேரத்தில் குறைவான தொகுதிகள் கொடுக்கும் போது, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டியது தானே. காங்கிரசுக்கு கொடுத்த 28 தொகுதிகளில் தி.மு.க.,வே போட்டியிட்டு இருந்தால், 15 தொகுதிகளில் வெற்றிக் பெற்றிருக்கும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 108 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்காது. 'தகைசால் தமிழர்' என்ற விருது, தி.மு.க., அரசால் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தான் கொடுக்கப்பட்டது. தி.மு.க., தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

விருதெல்லாம் கொடுத்தும் கூட, கூட்டணிக்கு குண்டு வச்சுட்டு போனதை, இவரால ஜீரணிக்க முடியலையோ?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us