PUBLISHED ON : ஜூன் 26, 2026 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:
'சார் நான் ஒரு ஆக் ஷன் பண்ணிக்கலாமா?' என்று, சபாநாயகரிடம் கேட்டு, சட்டசபையில் முதல்வர் விஜய் நடித்து காட்டியுள்ளார். 'ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்துாரில் என்ன ஆனது தெரியுமா?' என, 'பஞ்ச்' அடிக்கும் முதல்வரே, அதையே தான் நாங்களும் சொல்கிறோம்... மின்வெட்டு, விவசாயிகள் பிரச்னை, பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு பற்றியோ அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றியோ ஐந்து நிமிடமாவது பேசுங்கள்.
'ரீல்ஸை' விட்டுவிட்டு, 'ரியலு'க்கு வாருங்கள். முதல்வர் விஜய் முழுக்க முழுக்க தி.மு.க.,வை தானே விமர்சனம் செஞ்சாரு... அதுக்கு இவர் ஏன் பதிலடி தர்றாரு?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:
சட்டசபையில் முதல்வர் விஜயின் பேச்சு, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஆவேசம், ஆக்ரோஷம், நக்கல், நையாண்டி கலந்த புளித்து போன சினிமா வசனங்களின் தொகுப்பாகவே இருந்தது. குதிரை பேரம் நடத்தி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறி, சிலரை தட்டி துாக்கியதும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்ததும் தான் விஜய் பேசும் ஜனநாயகமா?
உங்க கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வை தட்டி துாக்கியவங்க, அவருக்கு எந்த பதவியும் தரலையேன்னு சந்தோஷப்படுங்க!
பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி:
தமிழக அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் இருக்கின்றனர். இவர்கள் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனரா? கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியவில்லை என்றால், தமிழக காங்கிரஸ் அமைச்சர்களின் நிலை என்ன? இதில், காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம் தற்போது தெரிகிறது.
அது இருக்கட்டும்... கர்நாடகாவில் எதிர்க்கட்சியா இருக்கும் உங்க கட்சி, 'மேகதாது அணை கட்டணும்'னு பிடிவாதம் பிடிக்குதே... அதை நீங்க கண்டிக்காதது ஏன்?
பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை துவங்கியுள்ள, 'வி த லீடர்ஸ்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் பேட்டி:
எங்கள் அமைப்பு எந்த அரசியல் கட்சிக்கும் பினாமி அல்ல. தமிழர்களை முன்னிறுத்தி, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அமைப்பை விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே உங்க அமைப்பை, 'பா.ஜ.,வின் பினாமி'ன்னு பலரும் குற்றஞ்சாட்டிட்டு இருக்காங்க... அதனால, சீக்கிரமா கட்சியை துவங்கி கொள்கையை அறிவிக்க பாருங்க!
