PUBLISHED ON : ஆக 10, 2026 12:46 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேட்டி: 'பல ஏரிகளை புனரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்பது தான் முதல்வர் விஜயின் ஆசை. சீமை கருவேல மரங்களை பயங்கரவாதிகள் போல் கருதி, நாட்டை விட்டே அகற்ற வேண்டும். குடிமராமத்து பணி தான் ஒரு நாட்டிற்கும், மக்களுக்கும் மிகத் தேவையானது. கடந்த ஆட்சியில், இதுபோன்ற வேலைகளில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேறு எதிலோ கவனம் செலுத்தி, ஐந்தாண்டுகளை வீணடித்து விட்டனர்.
'கமிஷன், கரப்ஷன், கலெக் ஷன்' ஆகிய மூன்றை தானே, 'வேற எதிலோ' என்ற பெயரில் நீங்க குத்திக்காட்டுறீங்க?
அ.தி.மு.க., மூத்த தலைவர் பொன்னையன் பேட்டி: அ.தி.மு.க.,வில் நில அபகரிப்பு, மது விற்பனை, பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடு பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொதுச்செயலர் பழனிசாமி முடிவு செய்திருந்தார். அவர்களில் சிலர், தங்களை காப்பாற்றிக் கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். கொள்ளையடித்த பணத்தை பாதுகாத்து, அதன் மூலம் அரசியல் பதவிகளை பெற்று, மீண்டும் தவறுகளில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் சிலர் அங்கு சேர்ந் துள் ளனர்.
சட்டவிரோத செயல்கள் செய்யவும், மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கவும், முதலில் அவங்களை அனுமதிச்சது, உங்க தலைமையின் தப்பு தானே!
பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் பேச்சு: நம்மால் முடிந்த அளவு கைத்தறி சேலைகள், வேட்டிகள், துணிகள் மற்றும் கைத்தறி தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துவோம். திருமண விழாக்கள், பண்டிகைகள் என சிறப்பு நாட்கள் மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்விலும், கைத்தறிக்கு ஆதரவு அளிப்போம். கைத்தறி நெசவாளர்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒளி வீசட்டும். கைத்தறி வாங்குவோம்; கைத்தறியை வளர்ப்போம்.
'நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற, வரும் தீபாவளிக்கு எல்லாரும் கைத்தறி துணிகள் எடுப்போம்'னு சபதமே போடலாம்!
கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய் வசந்த் பேச்சு:
கன்னியாகுமரியில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு தரமான மற்றும் மலிவு விலையில் தங்கும் வசதிகள் வழங்க வேண்டும். சர்வதேச தரத்தில், அரசே நட்சத்திர ஹோட்டல்கள் கட்ட வேண்டும். நவீன கடல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா கப்பல்கள், கடலோர படகு சேவைகள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் கடல்வழி போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு 500 கோடி ரூபாயை ஒதுக்கி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
காஷ்மீரில் சுற்றுலாவை ஊக்குவிக்க, மத்திய அரசு காட்டும் அக்கறையில், பாதியையாவது நம்ம கன்னியாகுமரிக்கும் தரணும்!
