PUBLISHED ON : ஆக 28, 2026 12:00 AM

காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை:
தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்றதும் நடைமுறைப்படுத்திய, 'மகாலட்சுமி' திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் மகளிருக்கு மாவட்டங்களுக்கு இடையேயான இலவச பயணம், தமிழகத்தில் தற்போது மாநில எல்லை வரை முழுமையாக இலவசமாக்கப்பட்டு, இன்று நாடெங்கும் சமூக நீதிக்கான புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது. இதேபோல், தெலுங்கானாவிலும் மகளிருக்கான இலவச பஸ் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என, அம்மாநில முத ல்வர் ரேவந்த் ரெட்டியை கேட்டுக் கொள்கிறேன்.
மகளிர் ஓட்டு வங்கிக்காக இப்படி வாரியிறைக்கப்படும் சலுகைகள், அரசு போக்குவரத்து கழகங்களை அதல பாதாளத்தில் தள்ளிடும் என்பதை யாருமே யோசிக்க மாட்டீங்களோ?
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
சூழ்ச்சிகளாலும், புனையப்பட்ட கதைகளாலும், மாவலி மன்னனை மறக்கடிக்க நினைத்ததை முறியடித்து, ஆண்டுதோறும் அந்த திராவிட அரசனை மக்கள் நினைவுகூரும் விழாவாக, ஓணம் திகழ்கிறது. அறுசுவை உணவும், அழகிய புத்தாடைகளும், அத்தப்பூக் கோலமும், கலை நிகழ்ச்சிகளும் நிறைந்த வண்ணமயமான திருவிழாவாக உலகெங்கும் ஓணம் கொண்டாடப்படுகிறது.
மாவலி மன்னனும், விஷ்ணுவும் இருந்தனர் என்ற புராணத்தை நம்பும் நீங்க, நரகாசுரனை விஷ்ணு வதம் செய்த தீபாவளியை நம்ப மறுப்பது ஏன்?
பா.ஜ., தமிழக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
த.வெ.க., அரசு, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தன் இயலாமையையும், செயலற்ற தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் என அறிவித்து விட்டு தற்போது, மூன்று சிலிண்டர்கள் மட்டும் அறிவித்துள்ளது. இதை, 'நிதி நெருக்கடி' என, முதல்வர் விஜய் நியாயப்படுத்த முயற்சித்துள்ளார். இது, மக்களுக்கு இழைக்கப்பட்ட தெளிவான துரோகம்.
உங்க கட்சி தலைமையில் இயங்கும் மத்திய அரசு தாராளமாக நிதியுதவி செய்தால், விஜய் வாக்குறுதிகளை முழுசா நிறைவேற்றுவாரே!
த.மா.கா., பொதுச்செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ் பேச்சு:
பிரதமர் மோடியின், 12 ஆண்டு ஆட்சியில் நாட்டின் உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், நேரடி நலத்திட்டங்கள் அதிகரித்துள்ளன.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, தொடர்ந்து 6 - 7 சதவீதமாக உள்ளது. உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கணிப்பின்படி, அடுத்த சில ஆண்டுகளில் உலகில் அதிவேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்பதில் சந்தேகமில்லை.
காங்., ராகுலுடன் உங்க தலைவர் வாசன் நட்பு பாராட்டிட்டு இருக்கார்... நீங்களோ, அதுக்கு நேர்மாறா மோடியை புகழ்ந்து தள்ளுறீங்களே!
