/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கருப்பு கவுனி சாகுபடியில் ரூ.5.40 லட்சம் லாபம்!
/
கருப்பு கவுனி சாகுபடியில் ரூ.5.40 லட்சம் லாபம்!
PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

தஞ்சை மாவட்டம், புன்னைநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேஷ்: எங்களுடையது விவசாய குடும்பம். கல்லுாரியில் படிக்கும் போது, விடுமுறை நாட்களில் அப்பாவிற்கு உதவியாக விவசாய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
பட்டப்படிப்பு முடித்ததும், அஞ்சல் துறையில் எனக்கு போஸ்ட்மேன் வேலை கிடைத்தது. அம்மாவின் வற்புறுத்தலால், அந்த வேலைக்கு போனேன்.
அப்பா இறந்ததும், அந்த வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமாக இயற்கை விவசாயத்தில் இறங்கினேன். சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறேன்.
இயற்கை இடுபொருட்கள் தேவைக்காக, நாட்டு மாடுகள் வளர்க்க ஆரம்பித்தேன். என்னிடம் 11 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் இரண்டு போகம் நெல் சாகுபடியும், ஒரு போகம் எள், உளுந்து சாகுபடியும் செய்து வருகிறேன்.
குறுவை பட்டத்தில் ரத்தசாலி, பூங்கார், கருங்குறுவையும், சம்பா பட்டத்தில் ஆத்துார் கிச்சிலி சம்பா, துாயமல்லி, கருப்பு கவுனி, மணிச்சம்பாவும் சாகுபடி செய்வேன்.
எப்போதும் கருப்புகவுனி நெல்லை அரிசியா மதிப்பு கூட்டி, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்தால், கிலோவுக்கு சராசரியாக, 90 ரூபாய் விலை கிடைக்கும்.
ஆனால், கடந்த ஓராண்டாக இந்த அரிசிக்கு விலை அதிகரித்து, தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதனால், சம்பா பட்டத்தில் வழக்கத்தை விட 5 ஏக்கர் பரப்பில் கருப்பு கவுனி சாகுபடி செய்தேன்.
ஒரு ஏக்கருக்கு, 21 மூட்டை வீதம், 5 ஏக்கரில், 105 மூட்டை நெல் மகசூல் கிடைத்தது. 6,300 கிலோ கருப்பு கவுனி நெல்லை, பட்டை தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியாக மதிப்பு கூட்டியதில், மொத்தம், 4,200 கிலோ அரிசி கிடைத்தது.
சென்னையில் உள்ள வியாபாரி 1 கிலோ, 160 ரூபாய் வீதம் மொத்தமாக வாங்கிக் கொண்டார்.
அதில், 6 லட்சத்து 72,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. 5 ஏக்கர் கருப்பு கவுனி நெல் சாகுபடி வாயிலாக கிடைத்த வைக்கோலை, என் மாடுகளுக்காக வைத்துக் கொண்டேன்; அதன் மதிப்பு, 20,000 ரூபாய்.
அரிசி அரைக்கும் போது, 100 கிலோ குருணை கிடைத்தது. அதை கிலோ, 80 ரூபாய் என விற்பனை செய்ததன் வாயிலாக, 8,000 ரூபாய் கிடைத்தது.
உமியை மட்டும் நீக்கி விட்டு, பட்டை தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியாக அரைத்ததால் தவிடு கிடைக்கவில்லை. ஆக, 5 ஏக்கரில் கருப்பு கவுனி சாகுபடி செய்ததன் வாயிலாக, 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
இதில் செலவுகள், 1.60 லட்சம் போக, லாபம், 5.40 லட்சம் ரூபாய் கிடைத்தது. நெல் சாகுபடியில் இந்தளவுக்கு கிடைக்குறது என்பது மிகப் பெரிய விஷயம்.