/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இனிப்பான வருவாயை தரும் மிளகாய் சாகுபடி!
/
இனிப்பான வருவாயை தரும் மிளகாய் சாகுபடி!
PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM

மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு, ஆறு மாதங்களுக்கு குறையாமல் தொடர்ந்து வருவாய் ஈட்டுவது குறித்து கூறும், மதுரை மாவட்டம், மேலுார் தாலுகா எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் விவசாயி ஸ்டாலின்:
நாங்கள் பரம்பரை விவசாயிகள். முழு நேரத்தொழிலே இதுதான். தற்போது நீதிமன்ற பணி நேரம் தவிர்த்து, விவசாயம் செய்து வருகிறேன். மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளேன்.
மொத்தம் 30 சென்டில், 'புல்லட் ரங்கா' வகை மிளகாயை இயற்கை முறையில், 1 அடிக்கு 1 அடி இடைவெளியில் நாற்று நட வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
பூக்கள், 50வது நாட்களில் பூக்கத் துவங்கி 60வது நாளிலிருந்து மிளகாய் பறிக்கலாம். 15 நாட்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு ஒவ்வொரு பறிப்புக்கும், 300 கிலோ முதல் 800 கிலோ வரை மிளகாய் கிடைக்கும். 20 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விலை போகும்.
சராசரியாக கிலோ 30 ரூபாய் என கணக்கில் கொண்டால், 24,000 ரூபாய் வீதம் மொத்த பறிப்புகளுக்கும் சேர்த்து, செலவு போக 1.25 லட்சத்திற்கு குறையாமல் வருமானமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
தண்ணீர், மருந்துகள் சரியான முறையில் அளித்து பராமரிக்கும்போது, ஓராண்டு வரை வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்.
மிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. மக்னீசியம், மாவுப்பொருள், சர்க்கரை, பொட்டாசியம், புரதம், அதிக அளவிலான விட்டமின்களுடன், நோய் எதிர்ப்பு சத்தும் அதிக அளவில் உள்ளது.
மிளகாய் ஈரமாக இருக்கும் போது பச்சை மிளகாயாக நேரடியாகவும், காய்ந்து வற்றலாக மாறும்போது வறுத்தோ அல்லது பொடியாகவோ பயன்படுத்தப்படுகிறது.
வெளியே கடைகளில் பொடியாகவோ அல்லது பாக்கெட்டுகளின் வாயிலாக வரக்கூடிய மிளகாய் பொருட்களை பயன்படுத்தும் போது கலப்படத்திற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
அதன் வாயிலாக கிடைக்கக் கூடிய முழு பலன்களும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படலாம். எனவே, நேரடியாக பச்சை மிளகாய் பயன்படுத்தும் போது முழு மருத்துவ பலன்களும் கிடைக்கும். சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு என்றென்றும் இனிப்பான வருமானத்தை தொடர்ச்சியாக அளித்து வருகிறது மிளகாய். தொடர்புக்கு: 94862 26074.
**************************
2 ஆண்டுகளில் ரூ.40 கோடியாக உயர்ந்த 'டர்ன் ஓவர்!'
சென்னையை சேர்ந்த, எல்.ஆர். இன்ப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ரவீந்திரன்:நான் பிறந்தது தேவகோட்டை. பள்ளிப் படிப்பை முடித்த பின், சிவில் இன்ஜினியரிங் படித்தேன். படித்து முடித்ததும் வேலை கிடைத்தது.
ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்த்ததால், ஒரு கட்டடத்தை எப்படி கச்சிதமாக முடித்து தர வேண்டும் என்று கற்றுக் கொண்டேன்.திருமணமான சில ஆண்டுகளுக்கு பின், சொந்தமாக சிவில் கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனி ஒன்றை துவக்கினேன். முதலில் பங்களா ஒன்றை கட்டித்தரும் வேலை கிடைத்தது. அதை சரியாக செய்து தந்தேன்.
அதன்பின், 20,000 சதுர அடியில் இண்டஸ்ட்ரியல் பில்டிங் ஒன்றை கட்டித்தரும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் சிறப்பாக கட்டித் தந்தேன்.
இப்படி சென்று கொண்டிருந்த நிலையில், கவர்மென்ட் புராஜெக்ட்டுகளை எடுத்து செய்ய ஆரம்பித்தேன். அதன்பின், கெஸ்ட் ஹவுசை இன்டீரியர் செய்து தரும் வேலை வந்தது.
அதை சரியாக செய்து தந்ததில், வங்கி அலுவலகங்களில் இன்டீரியர் செய்து தரும் வேலைகள் தொடர்ந்து கிடைத்தன; இதனால் என் வேலையே இன்டீரியர் என்பதாக மாறிப் போனது.
இன்டீரியர் வேலைக்காக நான் எங்கும் தேடி அலையவில்லை. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு துறை புதிதாக உருவாகும்.
அந்த துறையில் ஒரு ஆர்டர் கிடைத்தால் போதும்... அடுத்தடுத்து அந்த துறையில் இருந்து பல வேலைகள் வரும்
என்பது நான் கண்ட அனுபவம்.
வெறும் இன்டீரியரில் துவங்கி, புராஜெக்ட் மேனேஜ்மென்ட், சிவில் ஒர்க் டிசைன் அண்டு பில்ட் சர்வீசஸ், இன்டீரியர் பர்னிசிங், எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ் என, அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்து
தரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.நான் தனியாக நிறுவனம் துவங்கியது முதலே, என் வேலைகள் அனைத்தையும் சரிபாதிக்கு மேல் பகிர்ந்து கொள்வது, என் மனைவி தான்.
தவிர என் அலுவலக ஊழியர்கள், எனக்கு பொருள் சப்ளை செய்தோர், ஒப்பந்ததாரர்கள் என அனைவரின் உதவி இல்லாமல், நான் இவ்வளவு துாரம் வளர்ந்திருக்க முடியாது.மேலும், என், 52வது வயதில் பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்.,மில் சேர்ந்து படித்தேன். கடந்த, 25 ஆண்டுகளில் நான் செய்த, 'டர்ன் ஓவர்' 20 கோடி. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் என் நிறுவனத்தின் டர்ன் ஓவரை, 40 கோடி ரூபாயாக உயர்த்தும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு
இருக்கிறேன்.